இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், சுயாதீனம் கொண்ட நாட்டில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்தோடு இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைவருமே விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும், ஆனால் தற்போது அதுவல்ல பிரச்சனை என்றும், இலங்கை தமிழர்கள் எல்லா நலனும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமான விஷயம் என்றும் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
அத்தோடு, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரி என்பதை இலங்கை மக்களும், அரசும் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.