Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு ஆலோசனை!: இலங்கையில் கோவை விஞ்ஞானிகள்!!

இலங்கையின் வேளாண் தொழில் புனரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர், வேளாண் விஞ்ஞானிகள்   சென்றுள்ளனர்.

 

 இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் மறுசீரமைப்புப் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

 

 குறிப்பாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இலங்கை அரசு மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசும் பல்வேறு ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

 

 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பூமிக்கு அடியில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்தியாவின் உதவி பெறப்பட்டது.

 

 தற்போது வேளாண் தொழில் புனரமைப்புக்காக இந்திய அரசு வேளாண் நிபுணர்களின் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இக் குழுவில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.முருகேச பூபதி, ஆராய்ச்சி இயக்குநர் பரமார்த்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

 “”மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் மூலமாக இலங்கைக்கு இக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐசிஏஆர்) விஞ்ஞானிகள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையில் இருக்கும் இக் குழு இலங்கையின் வேளாண் தொழில் புனரமைப்புக்கான ஆலோசனைகளை அளிக்கும்” என வேளாண் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இக் குழு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

 

 இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், கோவை வேளாண் பல்கலை.யில் இருந்து விஞ்ஞானிகளை அனுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Exit mobile version