Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலுள்ள ஆட்கள் வசிக்காத 21 தீவுகளில் கடுமையான கண்காணிப்பு.

16.12.2008.

தமிழ்நாட்டுக்குள் கடற்கரை வழியாக எவரும் ஊடுருவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலுள்ள ஆட்கள் வசிக்காத 21 தீவுகளில் கடுமையான கண்காணிப்பும் இடம்பெறுவதாக மாநிலப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் 591 கரையோரக் கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

அதேவேளை, 441 கிராமவிழிப்புக் குழுக்களை அமைத்து அவற்றுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருவதாக கரையோரப் பாதுகாப்புக்குழு கூறியுள்ளது. இக்குழுவில் கடற்படை, கரையோரக் காவற்படை, மீன்பிடித்திணைக்களம், சுங்க, இறைவரித் திணைக்களங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கரையோரப் பாதுகாப்புக் குழுவானது 1994இல் பாக்கு நீரிணையில் கடத்தல்களைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்டதாகும். இது 2003 இல் மத்திய அரசின் கரையோரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடல்மார்க்கமாக ஊடுருவல்களை தடுக்கும் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

மும்பையில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படை தலைமைத்துவம், கரையோரக் காவல்படை, கரையோரப் பாதுகாப்பு குழு என்பன இணைந்து 1076 மைல் நீள கரையோரப் பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்து வருகின்றன.

கடல்ரோந்து மற்றும் யுத்தக்கருவிகளை நவீனமுறையில் கையாள்வது தொடர்பாக கரையோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதென கடற்படை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் கடற்படை, கரையோரக் காவல்படையுடன் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குமாறு மாநில புலனாய்வுத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி ?நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்? பத்திரிகை தெரிவித்துள்ளது. தென்கிழக்குக் கரையோரத்தில் 24 மணித்தியாலமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாகபட்டினம், கோடிக்கரை, மாலிப்பட்டினம், தோப்புத்துறை, இராமேஸ்வரம், மண்டபம், தூத்துக்குடி பகுதிகளில் கடற்படை, கரையோரக் காவல்படை ஆகியவற்றுடன் இணைந்து கரையோரப் பாதுகாப்பு குழுவினர் ரோந்து புரிவதாக பொலிஸ் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் ஜெகன் எம்.சேஷாத்திரி கூறியுள்ளார்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக் கரைக்கும் இடையில் எரிபொருள், மருந்து, போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காகவே கரையோரப் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டதாயினும் பின்னர் அது மத்திய அரசின் கரையோரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அதற்கு 44.08 கோடி ரூபாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகள் என்பவற்றை அமைக்கவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அமுல்படுத்தும் முன்னரங்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாகபட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரியில் குளச்சல், தூத்துக்குடியில் தலுவாய்க்குளம், இராமநாதபுரத்தில் தேவபட்டினம், மண்டபம், திருநெல்வேலியில் கூடாங்குளம், தஞ்சாவூரில் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் கடல்பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினத்தில் டிசம்பர் 15 இல் (நேற்று) 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

60 சோதனைச்சாவடிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன என்று சேஷாத்திரி கூறியுள்ளார்.

Exit mobile version