Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்குப் பதிலடி கொடுக்க வேண்டி ஜெயலலிதா மீண்டும் ஒரு கடித நாடகம்

Jayalalithaஅப்பாவித் தமிழக மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும், ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வாக்குப் பொறுக்கிக் கொள்வதற்கும் தமிழக இந்திய அரசுகள் போடும் நாடகத்தை மக்கள் ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்கள். இந்தத் தொடர் நாடகங்களின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை சிறையில் உள்ள 90 மீனவர்களை மீட்பதற்கு தூதரக அதிகாரிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இலங்கை கடற்படையின் சட்டவிரோத கடத்தல், கைது குறித்து தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் விலங்குகள் போல சிறைவக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுவித்து சுதந்திரமாக வாழ விடுமாறும், குறைந்தபட்சம் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் குழந்தைகளுக்குப் குடியுரிமை வழங்குமாறும் மாணவர்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜெயலலிதாவிற்கு, மூவர் தூக்கு விவகாரத்தில் அரசுக்கு ஆதரவளிக்கும் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதுவது ஒரு தேர்தல் கால பொழுதுபோக்கு.
ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த 70 மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து நான் ஏற்கனவே 17.06.2013, 08.07.2013, 01.08.2013 மற்றும் 02.08.2013 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு உயர்மட்ட தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஏழை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இலங்கை சிறையில் தவிக்கும்போது மற்றொரு சம்பவம் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 20 மீனவர்களை இலங்கைக் கடற்படை கடத்தி சென்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை அத்துமீறி கடத்தி சென்றிருக்கிறார்கள். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 5 எந்திர படகுகளில் கடந்த 3-ம் தேதி மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்களை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் 04.08.2013 அன்று காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகிவரும் வேதனை சம்பவங்கள் குறித்து தங்கள் கவனத்திற்கு தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் அப்பாவி தமிழக மீனவர்களின் நிலையை மத்திய அரசு கண்டுக் கொள்ளாததால் இலங்கைக் கடற்படையினரின் மிருகத் தனமான தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.
மத்திய அரசின் பாராமுகம் தமிழக மீனவர்களை மிருகத்தனமாக நடத்துவதற்கான தைரியத்தை இலங்கை கடற்படையினருக்கு அளித்திருக்கிறது. தொடர்ந்து இலங்கை அரசால் கடத்தல், கைது மற்றும் சிறை போன்ற அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்களிடையே பதற்றமும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மட்டுமின்றி இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை சமூக விரோதிகளாலும் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகிவரும் மீனவர்கள் நெருக்கடியான நிலையில் மத்திய அரசு தங்களை கைவிட்டுவிட்டது என்றும், தங்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நட்பில்லாத நாட்டின் தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடரும் நிலையில் திறமையான தூதரக நடவடிக்கை மூலம் அதனை சமாளிக்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களை நாங்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் என்று கடுமையான எச்சரிக்கையை தூதரக வழியாக இலங்கை அரசுக்கு விடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இப்பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இலங்கை சிறையில் உள்ள 90 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தாங்கள் பாரம்பரியமாக பாக். ஜலசந்தியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பதற்கு இலங்கை அரசுடன் தூதரக அளவில் உடனடியாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Exit mobile version