இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக பிரித்தானிய டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்காக 13.6 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கக் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்திருப்பதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு 1.1 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான 10,000 ரொக்கட்டுக்களை விற்பனை செய்ததுடன், 1.75 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வழங்க பல்கேரியா அனுமதி வழங்கியிருந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், அனுமதியளிக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தமுடியாது போனதாகக் குறிப்பிட்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகை, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கியதை உறுதிப்படுத்த முடிந்தது எனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடந்த ஐந்து மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மோதல்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்தும் டைம்ஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
“இந்த ஆயுதங்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு நாம் பதில் வழங்கவேண்டும்” என தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொது வெளிவிவகாரங்களுக்கான தெரிவுக்குழுவின் தலைவரும், ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான மைக் கபேஸ் கூறினார்.
பிரித்தானியாவின் இராஜதந்திரம்
இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் முன்னெடுத்துவந்த இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாகப் பலமுயற்சிகளை முன்னெடுத்திருந்தது.
இலங்கையில் மோதல்கள் உக்கிரமடைந்து, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்தமையைத் தொடர்ந்து மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டுமெனப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதுமாத்திரமன்றி இலங்கை விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு டெஸ் பிரவுணைத் தனது விசேட பிரதிநிதியாகவும் நியமித்திருந்தார். எனினும், டெஸ் பிரவுணின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவை நேரடியாகத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென வலியுறுத்தி வந்ததுடன், பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சருடன் இணைந்து இலங்கைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னரும் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமெனவே டேவிட் மிலிபான்ட் வலியுறுத்தி வந்தார். எனினும், பிரித்தானியாவின் வேண்டுகோளை செவிமடுக்காத இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து அவர்களைத் தோற்கடித்து மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் அறிவித்தது.
இந்த அறிவிப்பின் பின்னரும் இலங்கைக்கு எதிராக உரிமை மீறல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனப் பிரித்தானியா வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வொன்றைக் கூட்டியிருந்ததுடன், இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்றையும் முன்வைத்தது.
இவ்வாறானதொரு நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்குப் பிரித்தானியாவும் ஆயுதங்களை வழங்கியிருப்பதாகப் பிரித்தானிய ஊடகமான டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியானது மோதல்களை நிறுத்த பிரித்தானியா முன்னெடுத்த நடவடிக்கைகளிலும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.