நீதிமன்றம் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து அந்த இரண்டாவது சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான காவல்துறைப் பரிசோதகரான திரு.பிரசன்ன அல்விஸின் வேண்டுகோளுக்கிணங்க வாக்குமூலமொன்றைக் கொடுப்பதற்காக, தான் பிரசன்ன அல்விஸை சந்தித்ததாகவும், பிறகு லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் தான் சம்பந்தப்பட்டவன் எனச் சொல்லித் தன்னை தடுப்புக் காவலில் வைத்து பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு தன்னுடன் மேல்மட்ட இராணுவ அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் கூறி வாக்குமூலமொன்றைத் தரும்படியும் பிரசன்ன அல்விஸ் கூறியதாகவும், அவ்வாறு வாக்குமூலம் தந்தால் தன்னை அரச சாட்சியெனக் கருதி இவ் வழக்கிலிருந்து விடுதலை செய்து வெளிநாடொன்றில் போய் வசிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் தன்னிடம் கூறியதாக இச் சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
பிச்சை ஜேசுதாஸன் மற்றும் கந்தேகெதர ப்ரியவங்ஷ ஆகியோர் மீது அரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சித்தல், த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளர் திரு. கீத் நோயர் மீதான தாக்குதல் போன்ற குற்றச் சாட்டுகள் உள்ளதோடு இச் சந்தேக நபர்கள் கடந்த 8 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.