17.08.2008.
கொசோவோ மீதான மேற்குலகின் தலையீடு போன்று தெற்கு ஒசெட்டியா, அபாக்காசியா மீதான ரஷ்யத் தலையீடானது “இறைமை’ மற்றும் “ஆட்புல ஒருமைப்பாடு’ என்பன இறுக்கமான விதிமுறைகள் அல்ல என்பதையும் சக்தி மிக்க நாடுகள் தமது நலன்களை முன்னெடுப்பதற்கான இலகுவில் அழிந்துவிடக்கூடிய போர்வைகள் என்பதையும் வெளிப்படுத்துவதாக “தமிழ் கார்டியன்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சேர்பியா, ஜோர்ஜியா மற்றும் பல ஏனைய நாடுகளைப்போன்றே இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பனவும் அதிகாரம்மிக்க சக்திகளால் போதியளவுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் ஈழத்தின் தோற்றமும் அதிக வல்லமை கொண்ட சக்திகளுக்கு பயன்படுத்தக்கூடிய தருணத்தை உருவாக்கும் என்றும் புதிய விளையாட்டு ஆரம்பமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
“இலகுவில் அழிந்துவிடக்கூடிய கற்பனை உருவகங்கள்’ என்ற தலைப்பில் தமிழ் கார்டியன் பத்திரிகை தெரிவித்திருப்பதாவது;
ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சடுதியாக வெடித்திருக்கும் மோதல்கள் மொஸ்கோ அரசாங்கத்தைத்தவிர உலகின் ஏனைய நாடுகளை ஆச்சரியமடைய வைத்துள்ளன. ஆனால், ஜோர்ஜியாவின் அந்நியோன்யமான நேச அணியான அமெரிக்காவை எதிர்கொள்ள தயாராக காத்துக்கொண்டிருப்பதை மொஸ்கோ வெளிப்படுத்தி காட்டியுள்ளது. தெற்கு ஒசெட்டியர்களின் விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோர்ஜியா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் அப்போராட்டத்திற்கு முடிவுகட்டப்பட்டுவிடும் என்று பலர் தவறாக கணிப்பிட்டிருந்ததாக தென்படுகிறது. ஆனால், ரஷ்ய இராணுவத்திடமிருந்து பலத்த அடியை ஜோர்ஜியா எதிர்கொண்டிருக்கிறது. உலகளாவிய அதிகாரப் பங்கீடுகளுக்கு அப்பால் கடந்தவார நிகழ்வுகள் எங்குமுள்ள விடுதலைப் போராட்டங்களுக்கு முக்கியமான பாடங்களாகும். தமிழர்களுக்கும் அவை முக்கியமற்ற விடயங்கள் அல்ல. “இறைமை’, “ஆட்புல ஒருமைப்பாடு’ என்பன சர்வதேச அரசியலின் இரும்பினால் வார்க்கப்பட்டவை போன்ற மிக இறுக்கமான விதிமுறைகள் அல்ல என்பதும் பலம்மிக்க அரசாங்கங்களால் தமது நலன்களை முன்னெடுக்க போடப்பட்ட இலகுவில் சேதமடைந்துவிடக்கூடிய கவசங்கள் என்பதையும் ஞாபகமூட்டுவதாக இது அமைந்துள்ளது மிகவும் முக்கியமானதாகும்.
ஜோர்ஜியா யுத்தமானது பழைய பாணியிலான பலம்மிக்க நாடுகளுக்கிடையிலான மோதலாக கருதப்படுகிறது. தெற்கு ஒசெட்டியா, அபாக்காசியாவுக்கான ரஷ்யாவின் ஆதரவும் ஜோர்ஜியாவுக்கான அமெரிக்காவின் ஆதரவும் மொஸ்கோ வாஷிங்டன் மோதலாக உருவெடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து சென்று ஒருதலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் மேற்கொண்டது. அதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் மேற்கு நாடுகள் ஆதரவளித்தன. ஆனால், ரஷ்யா அதனை கடுமையாக ஆட்சேபித்தது.
இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்காக பெரும்பான்மை கொசோவோ இனத்தவரின் விருப்பத்தை அலட்சியப்படுத்த முடியாதென மேற்குலகு பிரகடனம் செய்திருந்தது. (இதேநாடுகள் 1999 இல் ரஷ்யாவின் ஆதரவுடைய சேர்பியா மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன. கொசோவோவில் இனச்சுத்திகரிப்பை தடுப்பதற்காகவே தாக்குதல் நடத்துவதாக அச்சமயம் தெரிவிக்கப்பட்டது.)
ஆனால், இந்த வாரம் நகைப்புக்கிடமான விதத்தில் அந்த நிலைமை மாறியுள்ளது. தெற்கு ஒசெட்டியாவில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறும் ஜோர்ஜியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்குலகு ஆதரவளித்துள்ளது. அபாக்காசியா உட்பட தெற்கு ஒசெட்டியாவிலுள்ள பெரும்பான்மையினர் ஜோர்ஜிய ஆட்சியிலிருந்து விடுபட விரும்புகின்றபோதும் மேற்குலகு ஜோர்ஜியாவுக்கு ஆதரவளிக்கின்றது. இந்தத் தடவை ரஷ்ய இராணுவம் இன அழிப்பை தடுப்பதாக கூறி தலையிட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இராஜதந்திர ரீதியான நகர்வுகள் எப்படியிருக்கும் என்பது ஒருபுறமிருக்க இந்த இரு விடுதலைப் போராட்டங்களும் நடைமுறைச்சாத்தியமான வடிவத்தை பெற்றுள்ளன என்பது இங்கு முக்கியமானதாகும்.
பலம்வாய்ந்த நாடுகள் தமது சுயநலன்களை பாதுகாப்பதற்காகவே இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை கவசங்களாக பயன்படுத்துகின்றன என்பது வெளிப்படையாக அறியக்கிடைக்கும் விடயங்களாகும். கடந்த பல தசாப்தங்களாக இலங்கையும் அதன் நேச அணிகளும் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படக்கூடாதென தமிழர்களுக்கு போதித்து வருகின்றன. உண்மையில் இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பன சேர்பியா, ஜோர்ஜியா, எதியோப்பியா நாடுகளைப் போன்றே சம்பந்தப்பட்ட பலம்வாய்ந்த நாடுகளுக்கு பொருத்தமான விதத்தில் பயன்படுத்தக்கூடியவையாகும்.
ஆசிய நாடுகள் பலவற்றில் “மனித உரிமைகள்’, “நல்லாட்சி’ என்ற விதிமுறைகளின் அடிப்படையில் மேற்குலகின் தலையீடுகள் அமைந்துள்ளன. அதேசமயம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்தல் என்பது உலகளாவிய நடைமுறையாக கொள்ளப்படுகிறது. அத்துடன், அரசியல், பொருளாதார நோக்கங்களை முன்னெடுக்க கணிசமான எண்ணிக்கையிலான பலம்வாய்ந்த நாடுகள் மேற்கொண்டுள்ள இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படாத நிலைமையும் காணப்படுகின்றது. இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிப்பது தொடர்பான கணிப்பீடுகள் உலகம் முழுவதும் ஒரேமாதிரியாகவே காணப்படுகின்றது. இனிவரும் தசாப்தங்களிலும் புதிய நாடுகள் உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் தோற்றம் பெறும்.