பணத் திரட்டலுக்குப் பொறுப்பானவர்களில் பலர் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமே வீடுகளிலும், சிறிய வியாபார நிலையங்களிலும் சென்று நிதி சேகரிப்பதற்குப் பயன்படுத்தினர்.
அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளைக் அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று பல கீழ்மட்டச் செயற்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அது நடக்காவிட்டால் ஜெயலலிதாவோ அன்றி பாரதீய ஜனதாவோ காப்பாற்றும் என்று வை.கோவையும் நெடுமாறனையும் உதாரணம் காட்டிப் போலி நம்பிக்கைகளை வழங்கினர்.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் கடன் அடிப்படையில் பணத்தை மீளத் தருவதாக கூறி புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
உணர்ச்சியின் உந்துதலால் பணம் சேகரித்த அப்பாவிகளான பலருக்கு பணம் எங்கு செல்கிறது என்பதைக் கண்டறிவதற்கான ஜனநாயகம் இராணுவ அமைப்பான புலிகளில் இருந்திருக்கவில்லை.
ஆக, முள்ளிவாய்க்காலில் அனைத்தும் அழிக்கப்பட்ட பின்னர் பெரும் தலைகள் பணத்தைச் சுருட்டிக்கொண்டன. பலர் பெருந்தொகைப் பணத்தோடு தலைமறைவாகிவிட்டனர். சிலர் பண பலத்தைப் பயன்படுத்திச் சட்டப்பாதுகாபைப் பெற்றுக்கொண்டனர். சிலர் இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் பணத்தை முதலீடாக்கிக் கொண்டனர்.
பணம் திரட்டிய அப்பாவிகள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். மாதாந்த ஊதியத்தையே கடனாக வழங்கிய பல புலம் பெயர் தமிழர்கள் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய அப்பாவிகளத் தேடியலைகின்றனர். பணம் எங்கு சென்றது என்பதையே அறியாத அவர்கள் பொதுவாகத் தமிழர்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்லவோ, விழாக்களுக்குச் செல்ல்வொ அஞ்சுகின்றனர். தவிர, பணம் பெற்றுக்கொண்ட பற்றிச்சீட்டுக்களில் கையெழுத்திட்ட அப்பாவி மனிதர்கள் மேற்கு நாடுகளின் சட்டத்தின் பிடியிலும் அகப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் பலர் கைதுசெயப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐரோப்பாவில் தேசியத்திற்காகப் போராடுகிறோம் பேர்வளிகள் என்று மாவீரர் நிகழ்வுகளோடும் ஆங்காங்கு அஞ்சலிக் கூட்டங்களோடும் நிறுதிக்கொள்ளும் புலி சார் அமைப்புக்கள் பாதிக்கப்படும் தமமது கீழ் மட்ட செயற்பாட்டாளர்கள் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை. சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளக்கூட வசதியற்ற பலரின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், பார்களிலும் ஐரோப்பிய அரசியல் வாதிகளோடு சோமபானம் அருந்தியபடியே அரசியல் பேசிக்கொள்ளும் கனவன்களான தேசிய வாதிகள் களத்தில் நின்று இரவுபகலாக உழைத்தவர்களை கைகழுவி விட்டுள்ளனர்.