Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால் 1999 இற்குப் பின்னர் இது மிகவும் மோசமான மோதல்’

09.09.2008.

“இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால் 1999 இற்குப் பின்னர் இது மிகவும் மோசமான மோதல்’ என்று கூறமுடியுமென தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவ உயரதிகாரி ஒருவர் ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கிறார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் விடுதலைப்புலிகளுடனும் தமிழ் மக்களுடனும் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு வரும்வரை அதிகளவு விளைவுகளை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் இலங்கைப் படையினர் முன்னேறிச் சென்றிருப்பது 25 வருடகால மோதலில் புதிய கட்டத்திற்கான பிரவேசமாக கொள்ளப்பட்டாலும் மரபு ரீதியான இராணுவ வெற்றிகள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுமென அர்த்தப்படுத்தமுடியாது.

கடந்த மூன்று வாரங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பிரவேசித்துள்ள இராணுவம் கிளிநொச்சியை தனது ஆட்லெறிவீச்சு எல்லைக்குள் வைத்திருக்கின்றது. புலிகளின் நிர்வாகத் தலைமையகத்தை இந்த வீச்சு எல்லைக்குள் வைத்திருப்பது அரசாங்கத்திற்கு ஓர் அடையாளமான வெகுமதியாகும்.

இந்த முன்னேற்றம் 1999 இல் ஏற்பட்டதைப் போன்றதொரு நிலைமையை ஏற்படுத்துமென சில விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். 1999 இல் புலிகளின் எல்லைக்குள் ஊடுருவிய படையினர் சில நாட்களில் திரும்பிவிட்டனர்.

இந்தத் தடவை இராணுவத்தின் கரங்கள் மேலோங்கியிருப்பதாகவும் புலிகளை சுற்றிவளைத்து நான்கு முனைகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விடுதலைப்புலிகளின் கடல்மார்க்க உடைமைகளை தாக்கும் அதேசமயம், ஷெல்வீச்சும் விமானத் தாக்குதலும் தரைவழி மோதலும் எவ்வாறாயினும் இது மிகச் சுலபமான பாதையாக அமையுமென அர்த்தப்படாது.

“அவர்கள் சிறியளவு வெற்றியையே பெற்றுள்ளனர். ஆனால், புலிகள் கடுமையான மோதலை மேற்கொண்டு வருகின்றனர்’ என்று லண்டனிலுள்ள யூரேசியா குரூப்பைச் சேர்ந்த ஆய்வாளர் மரியா கூசிஸ்டோ கூறியுள்ளார். “வருட முடிவுக்கு முன்பாக அவர்களை தோற்கடிப்பது தொடர்பான காலவரையறைக்குள் நிறைவேற்றுவது மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது என்று நான் நினைக்கிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்கள முன்னரங்குகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் நிலைமையில் புலிகள் இந்தவாரம் எதிர்த் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது கடுமையான பதில் தாக்குதல்களை தொடுத்துள்ளனர்.

இப்போது இராணுவம் கிளிநொச்சிக்கு வந்துள்ளதுடன் புலிகளின் இதயப்பகுதியின் வெளிமுனைகளில் வந்துள்ளது. தற்போது இந்தப் பிரிவினைவாத யுத்தத்தின் மிகத் தீர்க்கமான கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று கேன்ஸ் டிபென்ஸ் வீக்லியின் இராணுவ விவகார ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.

இழப்புகளின் எண்ணிகை தினமும் அதிகரித்து வருகிறது. ஆயினும், எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமானதாகவுள்ளது. ஏனெனில், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.

அவர்களை (புலிகளை) பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கும் அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால், எமக்கு அரசியல் தீர்வே தேவையானதாகும்.

அது இடம்பெறுமா இல்லையா என்பது மற்றொரு கேள்வி என்று முதலீட்டு ஆய்வு நிறுவனமான சிறி கப்டலின் பணிப்பாளர் சன்னா அமரதுங்க கூறியுள்ளார்.

கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றுமானால் அதுவொரு அடையாளமான வெற்றியாகவே அமையும். பங்குச்சந்தையும் கைத்தொழில்துறையும் சிறிதளவே அனுகூலமடையுமென அமரதுங்க கூறினார்.

அரசின் இராணுவ வெற்றிகள் புலிகளை காடுகளுக்குள் பின்வாங்கச் செய்து அவர்களின் நீண்டகால உபாயமான கெரில்லா போர் முறையை அதிகரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று தான் எதிர்பார்ப்பதாக மரியா கூசிஸ்டோ கூறியுள்ளார்.

விளையாட்டு முடிந்துவிடாது என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version