Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“இரு குட்டி யானைகளும் வவுனியா முகாம் மக்களும்”.

 
 
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க டேலவின் ஏற்பாட்டில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து பால் குடிமறவாத இரு கொம்பன் யானைக் குட்டிகள் கடந்த சனிக்கிழமை அவற்றின் தாய் யானைகளிடம் இருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டு கண்டிக்குக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. தலதாமாளிகையின் மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறுபராயத்தில் இருந்தே பயிற்சியளித்து வளர்ப்பதற்காக இரு குட்டிகளையும் சரணாலயத்தில் இருந்து கொண்டுவந்ததாக தியவதன நிலமே தரப்பில் கூறப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குட்டிகளை சரணாலயத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டு ஒத்துழைத்ததாகவும் தெரியவருகிறது.மூன்று வயதைக் கூடதாண்டாத யானைக்குட்டிகளை தாய் யானைகளிடம் இருந்து அவற்றின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தெடுத்த செயல் கொடூரமானது என்று மிருக உரிமைகள் ஆர்வலர்களினாலும் அமைப்புகளினாலும் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குட்டிகளுக்கு பாலூட்டுவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டதால் இரு தாய் யானைகளினதும் முலைகளில் பால் கட்டியாகி அவற்றுக்கு பாரதூரமான சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பின்னவலவில் உள்ள பராமரிப்பு உத்தியோகத்தர்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியானதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தாய்மாரின் அரவணைப்பு இல்லாமல் கண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குட்டிகளை பின்னவல சரணாலயத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் யானைகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்குமாறு கேட்டிருக்கும் மிருக உரிமைகள் அமைப்புகள், உலகிற்கு அன்பையும் கருணையையும் போதித்த புத்தபெருமானின் கோட்பாடுகளை பின்பற்றும் நிறுவனங்களின் பெயரில் இத்தகைய மிருகவதையைச் செய்யலாமா என்று பௌத்த மத பீடங்களிடம் கேள்வியெழுப்பியிருக்கின்றன.

யானைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை குறித்து கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் சில தினங்களுக்குள்ளாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஆசிரிய தலையங்கங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. யானைக்குட்டிகளைக் கடத்தியதன் மூலமாக பௌத்த மதத்தை நிந்தனை செய்தமைக்காக தியவதன நிலமேயும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏனையோரும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. பின்னவலவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட பின்னர் யானைக் குட்டிகள் நன்றாகப் பராமரிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கும் இளம் விலங்கியலாளர்கள் சங்கம் ஒரு யானைக்குட்டி தாக்கப்பட்டதைக் காண்பிக்கும் புகைப்படம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஒரு யானைக்குட்டியின் தந்தம் முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

யானைக் குட்டிகள் தாய்மாரிடமிருந்து பிரிக்கப்பட்ட செயலை “உயிரியல்களவு’ என்று வர்ணித்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை மறுதலித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. தியவதன நிலமே குட்டி யானைகளுக்குச் செய்திருக்கும் கொடூரம் தலதாமாளிகையுடனோ, புத்தசாசனத்துடனோ அல்லது பெரஹெரா போன்ற பௌத்த வைபவங்களுடனோ சம்பந்தப்பட்டதல்ல என்று மகா நாயக்க தேரர்களுக்கு சுட்டிக்காட்டியிருக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, குட்டி யானைகளுக்கு நேர்ந்த கதி தனது பிள்ளைகளுக்கு வருவதற்கு அமைச்சர் காமினி லொக்குகே அனுமதிப்பாரா என்றும் தியவதன நிலமே பால்குடியாக இருந்தபோது தாயாரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டிருந்தால் எத்தகைய உணர்வு அவருக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறது. 5 வயதை அடையும் வரை யானைக்குட்டியை தாய்யானையிடமிருந்து வழமையாகப் பிரிப்பதில்லை என்றும் அவ்வாறாக அந்த வயதை அடைந்த குட்டியைப் பிரிப்பதென்றால் கூட வனவிலங்கு திணைக்களத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தத்திலே இந்த மிருகங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடூரத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பும் மிருக உரிமைகள் ஆர்வலர்களினதும் அமைப்புகளினதும் கோரிக்கை பின்னவலவில் இருக்கும் தாய்யானைகளிடம் குட்டிகளைக் கொண்டுபோய்ச் சேர்த்து அவற்றின் வேதனையை போக்கவேண்டும் என்பதேயாகும்.மிருகங்கள் மீதான கருணை மேலோங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், மிருக வதைக்கு எதிரான கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற மதங்களைச் சேர்ந்தவர்களை அதிகப் பெரும்பான்மையாகக் கொண்ட நமது நாட்டில் தினமும் பல ஆயிரக்கணக்கான மிருகங்கள் கொலை செய்யப்பட்டு மனிதர்களின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இரு கொம்பன் யானைக் குட்டிகளுக்கு நேர்ந்த கதிக்காக கருணையின் பெயரில் குரலெழுப்புகின்ற ஆர்வலர்களிடமும் அமைப்புகளிடமும் அண்மைக் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டு சொ ல்லொணா அவலங்களை அனுபவித்த இலட்சக்கணக்கான மக்கள் தொடர்பில் எந்தளவிற்கு அக்கறை இருந்தது என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை.

பின்னவலவில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் தாய்யானைகளிடம் குட்டியானைகளை மீண்டும் கொண்டுபோய் சேர்த்து விடுமாறு உரத்துக் குரலெழுப்புவோர் வவுனியாவில் முட்கம்பி வேலிகளினால் சூழப்பட்ட முகாம்களுக்குள் படுமோசமான சூழ்நிலைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 3 இலட்சம் மக்களை விரைவாக அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் குறைந்தபட்ச மனிதாபிமானத்தின் பேரிலாவது கேட்க முன்வருவார்களா? யானைக் குட்டிகள் தாய் யானைகளுடன் சேர வேண்டும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதேவேளை, சேருவதற்கே தாய்மாரோ தந்தைமாரோ இல்லாமல் எத்தனை ஆயிரம் குழந்தைகளும் சிறுவர்களும் வவுனியா முகாம்களில் வானத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிவார்களா? விமானக் குண்டு வீச்சில் காயமடைந்த பெண்மணியிடம் பால் குடித்த குழந்தையொன்று அந்தத்தாய் சில நிமிடங்களில் இறந்ததையும் அறியாது தொடர்ந்தும் சடலத்தின் மார்பகங்களில் முகம்புதைத்து பால் குடித்துக் கொண்டிருந்த நெஞ்சை உறைய வைத்த வன்னிச் சம்பவத்தை தாய் யானைகளின் முலைகளில் பால் கட்டியாகி பெரும் வேதனையைக் கொடுக்கப் போகிறது என்று கவலைப்படுபவர்களின் கவனத்துக்கு கொண்டு வரவிரும்புகிறோம்!

 Tamil   Editorial – Thinakkural

Exit mobile version