Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை

தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இறைமைக்கு எதிராக பேசியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Exit mobile version