Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள்!:அரசாங்கம் அறிவிப்பு.

22.01.2009.

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.

மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version