இரண்டாவதாக ஒரு யுரேனிய செறிவூட்டல் ஆலை கட்டியிருந்ததை மறைத்ததற்காக இரான் மீது இந்த நடவடிக்கை என்று அந்த நாடுகள் கூறுகின்றன.
அணுச் செறிவூட்டல் செய்யும் இந்த ஆலை குறித்து இன்றுதான் தெரியவந்தது என்றும், அந்த ஆலையில் அளவும் கட்டமைப்புகளும் இராணுவம் சாரா அணுசக்தி தொழில்நுட்பத்துக்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை என்றும், ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின்போது பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இப்படியான ஒரு அணு ஆலையை இரான் மறைத்து வைத்திருந்த விதமானது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது என்று கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண், இரான் மீது மேலும் தடைகள் விதிப்பதென்பதை உறுதிசெய்ய இது வழி வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இரானின் அணு உலை குறித்த உளவுத்தகவல்களை மூன்று தலைவர்களும் வெளியிடுவதற்கு சில மணிநேரம் முன்னதாக, தம்மிடம் உள்ள அணு உலை வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அந்த நாடு, ஐ.நாவின் அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
ஆனால், தம்மிடம் இருந்த அணு உற்பத்தி கட்டமைப்புக்கள் என்றும் ரகசியமாக இருந்தவை அல்ல என்று இரானின் அணு நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
ஆலை இன்னமும் செயற்பாட்டுக்கு வரவில்லை என்றும், அது மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.
அந்த ஆலைக்கு சென்று பரிசோதிப்பதற்கான அனுமதியை இரான் முடிந்தவரை சீக்கிரமாக தர வேண்டும் என்று தற்போது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் கேட்டுள்ளது.
தற்போது தெஹ்ரானின் தென்பகுதியில் உள்ள நத்தன்ஸில் இருக்கும் ஒரு அணு ஆலைக்கு மாத்திரமே அனுமதி இருக்கிறது.