01.11.2008.
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்;
களமுனை அதிர்ந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், உடலங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. அது ஒரு பயங்கரமான நிகழ்வு என ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் வன்னிப் பகுதியில் நிகழ்ந்த மோதல் தொடர்பான தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் இராணுவத்தின் 12 ஆவது கஜபா றெஜிமென்ட் படையணியைச் சேர்ந்த 29 வயதான மகேந்திரா என்பவர்.
அவரின் தலையின் பின்புறம் தாக்கிய ஒரு துப்பாக்கிச் சன்னம் மேல் தோளில் தங்கிவிட்டது. தற்போது வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. களமுனைக்கு திரும்புமாறு மகேந்திராவுக்கு தகவல் வந்துள்ளது. தனது மண் குடிசையிலிருந்து பயணத்திற்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
கிளிநொச்சிப் பகுதியை தாம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அரசு கூறி வருகையில் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போரில் காயமடைந்த படையினரை அரசு மீண்டும் அழைப்பதுடன் கடந்த மாதம் அது பாதுகாப்புச் செலவை 177 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இது முன்னைய வருடத்தின் செலவுகளை விட 6 வீதம் அதிகமாகும். இந்த நிதிகளில் பெரும்பாலானவை புதிதாக இராணுவத்தினரை சேர்ப்பதற்காக செலவிடப்படவுள்ளன. இராணுவம் புதிதாக ஆட்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் அது நான்காவது தடவை ஆட்சேர்ப்பு படலத்தை ஆரம்பித்திருந்தது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலும் 24,000 பேரை சேர்ப்பதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. எனினும் இதுவரை 10,136 பேர் சேர்ந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவம் 1,40,000 பேரை கொண்டுள்ளது. இது பிரித்தானியாவின் இராணுவத்தை விட ஆட்தொகையில் அதிகம். அண்மைக்காலமாக பாதுகாப்பு அமைச்சகம் படையில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு செய்திகளை செல்லிடப்பேசிளுக்கு அனுப்பி வருகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தனது கிராமத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த கிராமத்தில் 400 குடும்பங்களே வாழ்கின்றன. மிகவும் பின்தங்கிய அந்தக் கிராமத்தில் ஒழுங்கான வீதிகள் கிடையாது, குடிதண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்சார வசதிகளும் நிறைவாக இல்லை. 48 கி.மீ.தொலைவிலேயே மருத்துவமனை உள்ளது.
தமது வறுமையை போக்குவதற்காக அந்த கிராமத்தில் உள்ள பெருமளவான இளைஞர்கள் படையில் இணைந்துள்ளனர். அதாவது, அந்த கிராமத்தில் உள்ள ஆண்களில் அரைப்பங்கினர் முப்படையிலும் பணியாற்றுகின்றனர்.
மகேந்திரா 2002 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்திருந்தார். அவர் தனது ஊதியத்தில் 19 அங்குல வர்ணத் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி என்பனவற்றை கொள்வனவு செய்துள்ளதுடன், புதிதாக வீடு ஒன்றைக் கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளார். எனினும் தனது மகன் போர்க்களத்தில் உள்ள நேரங்களில் தாம் நிம்மதியின்றி இருப்பதாக அவரின் வயதான தந்தையார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் வன்னியிலிருந்து படையினரின் உடல்கள் அங்கு வருவதுண்டு. அப்போது கிராமத்தில் அச்சம் நிறைந்து விடும். கடந்த ஆறு மாதத்தில் 7 உடல்கள் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வேறு வேலைவாய்ப்புக்கள் கிடைத்தால் எனது மகனை நான் இராணுவத்தில் சேர அனுமதித்திருக்கமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய வருடங்களாக இராணுவத்திலிருந்து தப்பி ஓடுவோரால் அரசு பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. போர் தீவிரமடையும் போது இந்த நெருக்கடி அதிகமாகி வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் போரில் வெற்றியீட்டுவதற்கு மனிதவலு முக்கியமானது. அரசு தொடர்ந்தும் பொதுமன்னிப்புக்களை அறிவித்து வருகின்றது.
கடந்த ஆறு மாதங்களில் 4,004 பேர் பணிக்கு திரும்பியதாக அரசு அறிவித்துள்ளது. எனினும் நாடு தழுவிய ரீதியில் தப்பியோடிய படையினரை கைது செய்வதற்கு அரசு முயற்சித்து வருகின்றது. இதுவரையில் 2,984 படையினரையும் 21 அதிகாரிகளையும் கைது செய்துள்ள அரசு, அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. அவர்களின் குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் மூன்று வருடங்கள் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.
எனினும் இராணுவம் கூறுவது போல் இராணுவம் உண்மையில் வெற்றியீட்டி வந்தால், ஏன் அதிகளவில் படையினர் தப்பி ஓடுகின்றனர்? வெற்றியீட்டும் இராணுவத்திலிருந்து யாரும் தப்பியோட நினைப்பதில்லை என தனது பெயரை குறிப்பிட விருப்பதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகேந்திரா வசிக்கும் சிறிய பகுதியில் ஆறு பேர் இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை தேடி இராணுவ பொலிஸார் பல தடவைகள் அந்த கிராமத்திற்கு வந்ததுண்டு. அந்தச்சமயங்களில் அவர்கள் தப்பியோடி அருகில் உள்ள நெல் வயல்களில் ஒளிந்து விடுவதாகக் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் 25 வருடங்களாக போராடி வருவதாகவும் அவர்களை முறியடிப்பது இலகுவனதல்ல எனவும் 28 வயதான பிரியந்த தெரிவித்துள்ளார். இவர், இரண்டு தடவைகள் இராணுவத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
முதலில் 2000 ஆம் ஆண்டும், பின்னர் 2006 ஆம் ஆண்டும் தப்பியோடியிருந்தார். தனிப்பட்ட காரணங்களால் தான் தப்பியோடியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். போரின் அச்சத்துடன் தாங்கள் வாழமுடியாது என அவரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயம் செய்து வரும் பிரியந்த தான் எந்த நேரமும் இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.