Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவத்தளபதியின் கருத்து:இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஜனநாயக நிகழ்வுப் போக்கிற்கும் தீங்கு ஏற்படுத்துபவை.

02.09.2008.

கனடிய நஷனல் போஸ்ட் செய்தித்தாளுக்கு இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த கூற்றையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரயத்தனம் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தச் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்த சில கருத்துகள் அரசியல் தன்மை கொண்டவை. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஜனநாயக நிகழ்வுப் போக்கிற்கும் தீங்கு ஏற்படுத்துபவை.

இராணுவத் தளபதி தனது பேட்டியில் பின்வருமாறு கூறியிருந்தார்:

“” இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால்,சிறுபான்மை இனங்களும் உள்ளன. அவற்றை எமது மக்களைப்போலவே நாம் நடத்துகின்றோம். நாட்டின் பெருபான்மையினராக, 75 சதவீதத்தினராக நாங்கள் விளங்குவதால் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். மேலும் இந்த நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எமக்குண்டு. நாம் பலம் வாய்ந்த இனத்தவர்கள் ஆவோம். அவர்கள் இந்த நாட்டில் எம்மோடு வாழ முடியும், ஆனால், சிறுபான்மையினராக இருக்கின்ற காரணத்தினால் உரித்தல்லாத விடயங்களைக் கோரக்கூடாது.’

ஜனநாயக நாடு ஒன்றில் தமது சொந்தக் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இராணுவத் தளபதி போன்ற ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும் மற்றவர்களின் மனங்களைப் புண்படுத்தக் கூடியதுமான கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாது, தெரிவிக்கவும் கூடாது. சிங்களவர்கள் பெருபான்மையினர் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆயினும், இந்த நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது என்று ஒருவரால் கூறமுடியாது. பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்திருக்கும் அனைத்து சமூகங்களுக்கும் இலங்கை உரியதாகும்.

அவருடைய கூற்று சிங்களத் தீவிரவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தலாம். ஆனால், இது பெரும்பான்மையினரையும் சிறுபான்மையினரையும் ஒன்று போலவே பாதுகாக்கும் கடமையுள்ள ஒரு இராணுவத் தளபதியின் பாரபட்சமின்மை பற்றி தீய மனப்பதிவையும் சந்தேகத்தையும் இயல்பாகவே உருவாக்கிவிடும்.

ஆயினும் நாட்டின் முக்கியமான கட்சிகள் இது போன்ற கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு பற்றிய அவற்றின் நிலைப்பாடு வேறுபட்டாலும் இலங்கை ஒரு பல்தேசிய, பல மதங்களைக் கொண்ட நாடு என்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டிய தேவையுள்ள பிரச்சினைகள் சிறுபான்மையினருக்கு உள்ளன என்பதையும் அவை ஒவ்வொன்றும் ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிலைப்பாடு காரணமாகவே முக்கிய அரசியல் கட்சிகள் சர்வ கட்சி மாகாநாட்டின் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இணைந்து செயலாற்றுகின்றன.

இராணுவத் தளபதி தாம் சிங்களப் பெரும்பான்மையினத்தவர் என்பதில் பெருமிதம் கொண்டாலும் 99 சதவீதமான சிங்களவர்களைக் கொண்ட இதே பாதுகாப்புப் படைகள்தான் தென்னிலங்கையில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சிகளின் போது தமது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்?றாழிப்பதற்கு பொறுப்பாக இருந்தன என்பதை நாடு மறந்துவிட முடியாது. இந்த இளைஞர்கள் தமக்கு உயிரில்லாத விடயங்களைக் கோரினார்கள் என்று இராணுவத் தளபதி நினைக்கிறாரா?

இராணுவத் தளபதியின் கருத்து ஆயுதப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு முரண்படுகின்றது. ஜனாதிபதி எப்போதுமே அரசியல் தீர்வுக்கே குரல் கொடுத்து வருகிறார். பி.பி.சி.க்கு சமீபத்தில் அளித்தப் பேட்டியில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் இராணுவத் தளபதி தெரிவித்த கருத்துகளை ஒத்த அபிப்பிராயத்தை வெயிட்டிருந்தார்.

இராணுவத் தளபதியின் கருத்து 1962 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்த போது நிகழ்ந்த இராணுவச் சதியின் நிழலைத் தருகிறது. இதே போன்ற மனோநிலை மீண்டும் தனது அசிங்கமான தலையைத் தூக்குகின்றது. இது இயல்பாகவே ஜனநாயகத்தை இல்லாதொழித்துவிடக் கூடியது. இராணுவவாதம் எவ்வாறு பங்காற்றியது என்பதற்கு பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் குறுகிய காலம் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கு அனுபவமுண்டு.

இத்தகைய ஆபத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இது நாட்டின் துரிதமான இராணுவமயப்படுத்தலேயன்றி வேறெதுவுமில்லை. பயங்கரவாதத்தைத் தோல்வி காணச் செய்த பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது. ஆயினும் யுத்தத்தில் வெற்றி காண்பதற்கு முன்பே இராணுவம் தனது பெரிய அண்ணன் மனோபாவத்தைக் காட்டுகிறது. எனவேதான் நேர்மையாகச் சிந்திப்பவர்கள் உறுதியளிக்கப்படும் அரசியல் தீர்வு வருங்காலத்தில் எவ்வாறு பலன் தரும் என்று ஆச்சரியப்படுகின்றனர்.

எனவே பிரயத்தனம் மக்கள் இயக்கம் இராணுவத் தளபதியின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளையில் தீவிரவாத மற்றும் பேரினவாதச் சக்திகளினால் திணிக்கப்படும் இராணுவவாத மனோபாவ முயற்சிகளைத் தோல்விகாணச் செய்வதில் சகல ஜனநாயகச் சக்திகளும் ஐக்கியப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது .

Exit mobile version