Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவத்தளபதிக்கும், படையினருக்கும் வழங்கியிருக்கும் சக்தி, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கும் வழங்கப்படவேண்டும்: சரவணமுத்து

20.09.2008.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் கட்டமைப்பான இருப்பின், இராணுவத் தளபதிக்கும், படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் சக்தியும், உந்துதலும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு வழங்கப்படவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்துவிடாது என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், அரசியல் தீர்வொன்றே இனப்பிரச்சினைத் தீர்வுக்குச் சாத்தியமான வழியாக இருக்கும் எனக் கூறினார்.
அவ்வாறான இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவசியமான கட்டமைப்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு காணப்படுகின்றதாயின், தற்பொழுது இராணுவத் தளபதிக்கும், படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கும் சக்தியும், உந்துதலும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கும் வழங்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வன்னியில் மனிதப் பேரவலம்
வன்னிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளால் அப்பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதுடன், வன்னியில் பாரிய மனிதப்பேரவலம் ஏற்படும் சூழல் தோன்றியிருப்பதாகவும் சரவணமுத்து எச்சரித்துள்ளார்.
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளபோதும், அவர்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருப்பதாகத் தெரிவித்த பாக்கியசோதி சரவணமுத்து, இவ்வாறான நிலையில் மக்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை குறித்து ஆராயவேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்காமை வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வராமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வவுனியாவில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் முகாம்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைபோன்றே காணப்படும் என்ற தகவல் வன்னி மக்களுக்குச் சென்றிருப்பது மற்றுமொரு காரணமாக இருக்கும் என அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டார். 
இவ்வாறானதொரு நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து செறிவாகத் தங்கியிருக்கும் பகுதிகள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தப்போகிறார்களா அல்லது மக்களை வன்னியிலிருந்து வெறியேற்றுவதற்கான உணவுப் பொருள் விநியோகத்தைத் தடைசெய்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சிக்குமா என்ற கேள்வி தோன்றியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னியில் தோன்றியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும், இது பற்றி உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாக சர்வதேச சமூகம் உறுதியளித்திருப்பதாகவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறினார்.
www.inllanka.com
Exit mobile version