Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவச் சதிப்புரட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் இலங்கை அரசு

இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவளை, இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மகிந்த அரசின் குடும்ப சர்வாதிகாரம் சிங்கள மக்கள் மத்தியிலும் பெரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்னிப் போரில் இலங்கை அரசை ஆதரித்த ஜே.வீ.பீ போன்ற இனவாதக் கட்சிகள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
நேற்று அமரிக்கா பயணமான சரத் பொன்சேகாவின் பின்பலமாக அமரிக்க அரசியல் நலன்கள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் நிகழும் அரசியல் போட்டியில் வெளிப்படையான இனவாதியான சரத் பொன்சேகா துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப் படுகிறார் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து. மகிந்த ராஜபக்ச அரசிற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் நிலையில் இந்தத் தடை உத்தரவானது ராணுவச் சதிப் புரட்சிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Exit mobile version