Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராஜபட்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நெடுமாறன் அறிவிப்பு.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சேயை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்குமுன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து அய்.நா. விசாரனை மன்றம் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் இராசபக்சேயின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள இராசபக்சேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இராசபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு… சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

அன்புள்ள (பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Exit mobile version