Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரணைமடுக் குளத்திற்கு வடமேற்கே பெண் கரும்புலிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிப்பு!

28.009.2008.

நேற்று நண்பகலும் இரணைமடுக் குளத்திற்கு வடமேற்கே விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் இதில், புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அடிக்கடி சென்று வரும் பெண் கரும்புலிகளின் முகாம் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்தனர்.

வன்னியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே உக்கிரசமர் நடைபெற்றுள்ள அதேநேரம், விமானப் படை விமானங்கள் அங்கு தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நேற்று சனிக்கிழமை நண்பகல் கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற கடும் விமானத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் சிறு குழந்தையொன்றும் பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இவை குறித்து மேலும் தெரியவருவதாவது;

கடும் விமானத் தாக்குதல்கள், ஷெல் வீச்சுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் அக்கராயன்குளம் மற்றும் கொக்காவிலுக்குச் சமீபமாகக் கடும் சமர் வெடித்துள்ளது.

கொக்காவில் மற்றும் “ஏ9′ வீதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் பாரிய முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தரைப் படையினருக்கு ஆதரவாக விமானப் படை விமானங்களும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் இரவு பகலாகக் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கவசப் படையினரின் உதவியுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்ளும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

முன்னேற முயலும் படையினருக்கு ஆதரவாக சகல பகுதிகளிலுமிருந்து படையினர் ஷெல்களை மழைபோல் பொழிந்து வருகின்றனர். கிளிநொச்சி நகர், இரணைமடு, இருதயபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்து வெடித்து வருகின்றன.

கொக்காவிலைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலுக்கெதிராகப் புலிகளும் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு மோதிவருகின்றனர்.

புலிகளின் பல நிலைகள் மீதும் விமானப் படை விமானங்கள் கடும் குண்டு வீச்சை நடத்தி வருவதுடன் தாக்குதல் ஹெலிகொப்டரான எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர்கள் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதாக விமானப் படையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை காலை முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா முனைகளில் இந்த விமானத் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

அக்கராயன்குளத்திற்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தூரத்திலும் முல்லைத்தீவில் பிரமனாலங்குளத்திற்கு தெற்கே 2 கிலோ மீற்றர் தூரத்திலும் வவுனியாவில் புளியங்குளத்திற்கு தென்கிழக்கே ஒரு கிலோ மீற்றர் தூரத்திலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொக்காவில் பகுதி நோக்கி முன் நகரும் படையினர் புலிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியல் “ஏ9′ வீதிக்கு மேற்காக கொக்காவில் ரயில் நிலையத்திற்குச் சமீபமாகச் சென்றுள்ளதாக படைத் தரப்பு தெரிவித்தது.

“ஏ9′ வீதி கொக்காவில், அக்கராயன்குளம், திருமுறிகண்டி, இரணைமடு மற்றும் இரணைமடுக்குளத்தை அண்டிய பகுதிகள் நோக்கி தொடர்ச்சியாக உக்கிர ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல்

எனினும் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதியான இருதயபுரம் பகுதியில் குண்டு வீச்சு விமானங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் ஒருவர் பலியானதுடன் கைக்குழந்தையொன்றும் பொண்ணொருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் இரணைமடுச்சந்தியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வன்னித் தலைமையகத்திலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வளாகத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் தொலைத்தொடர்புக் கோபுரம் முறிந்துள்ளது.

நேற்று நண்பகல் இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சில் மக்கள் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துமுள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை முதல் நடைபெற்றுவரும் கடும் சமரில் 60 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் மூவரே கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version