07.04.2009.
சர்வகட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்த பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலேயே குப்பைக் கூடைக்குள் போட்ட அரசிடமிருந்து இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இன்று தமிழ் பேசும் மக்கள் அரசியல் தீர்வில் நம்பிக்கை வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புடன் காணப்படுவதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.
நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் செய்தியாளர் மாநாட்டிலேயே மனோகணேசன் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
இன்று இந்த நாட்டில் அடிப்படைப்பிரச்சினை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதாகும். அதற்கு முடிந்தளவு ஒத்துழைக்கும் வகையிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி புறக்கணித்த நிலையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டது.
ஆனால் சர்வகட்சிக் குழுவின் பரிந்துரைகளில் ஜனாதிபதி அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. சர்வகட்சிக்குழுவின் நிபுணர் குழு தயாரித்தளித்த பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்துப் பார்க்காமலேயே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விதப்புரைகளை பகிரங்கப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராகஇல்லை. பதிலாக அரசாங்கம் இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே முனைப்புக்காட்டிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்விலும், அரசுமீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதில் அரசாங்கத்துக்கு துளியளவும் எண்ணம் கிடையாது.
அரசாங்கத்துக்கு தீர்வு காணும் எண்ணம் இருக்குமானால் முதலில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை நான் அரசுக்கு சவாலாகவே தெரிவிக்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் குறித்து கேட்கப்பட்ட போது பதிலளித்த மனோ கணேசன், 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தை தமிழ் மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே நிராகரித்து விட்டதாகவும் அதைப் பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களைகூட வழங்க அரசு தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார்.