Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டநிகழ்வு இறக்குவானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதா?: இடதுசாரி முன்னணி கேள்வி

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டம் இறக்குவானையில் ஆரம்பமாகியுள்ளதா என்று மலையக இடதுசாரிமுன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இன ஒடுக்குமுறையின் உச்சகட்டம் நிலவுவதினால் தான் இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கோலம் பூண்டு நிற்கின்றனர்.

பேரினவாதிகளின் இன ஒழிப்பு ஒடுக்குமுறைகள் ஒருபக்கத்தில் நடந்துகொண்டு இருக்க மறுபக்கத்தில் மத ரீதியான ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது இறக்குவானையில் நடந்துள்ளது.

கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திருவிழா நடைபெற்றுவருகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்வது வழக்கமானதொன்றாகும். திடீரென இம்மாதம் வெசாக்பண்டிகைக் காலம் நடைபெற்று வருவதால் நீங்கள் உற்சவத்தை நடத்தக்கூடாது என இனவாதிகளினால் தடைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கமோ அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அமைச்சர்களோ மௌனம் சாதிப்பது எதைக்காட்டுகிறது. மேலும் ஆலய உற்சவத்தை நடத்த முற்பட்ட ஆலய நிர்வாகிகள் உட்பட உற்சவத்திற்கு ஆதரவாக செற்படும் அனைத்து பிரிவினருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

இதில் உள்ள கவலைதரும் விடயம் என்னவென்றால், கடந்த இரண்டு கிழமைக்கு மேலாக நடைபெற்றுவரும் இறக்குவானை ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய நெருக்கடி தொடர்பாக எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியின் பிரமுகரும் குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் செய்து அம்மக்களின் துயரநிலை தொடர்பாக எத்தகைய கரிசனையும் காட்டாத நிலைமையே. ஒரு சிலர் வெறும் பத்திரிகை அறிக்கையுடன் தமது கடமை முடிந்துவிட்டது என எண்ணுகின்றனர்.

மத ஒடுக்குமுறைகள் இன்றைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்த காலம் முதற்கொண்டு நடந்தேறி வருகின்றது. இதற்கு முன்பு பல கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டமையை நாம் மறந்து விடமுடியாது. இதே போன்று இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பாங்கு ஓதுதல், பாடசாலைக்கு இஸ்லாமிய ஆடைகள் அணிந்து செல்லுதல் என்பவற்றுக்கு எதிராக இனவாதிகள் செயற்பட்டு வந்தனர்.

இன்று இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழா உற்சவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பேரினவாதிகளின் இத்தகைய செயற்பாடுகளுக்கு பொலிஸாரும் ஒருவகையில் துணைபோயுள்ளனர் என்றே இப்பகுதி மக்கள் தமது விசனத்தை தெரிவிக்கின்றனர்.

உற்சவம் ஆரம்பமாவதற்கு சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இனவாதிகள் பௌத்தகுருமாரின் தலைமையில் அத்துமீறிப் பிரவேசித்து மேற்படி நிகழ்வை அச்சுறுத்தி நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போது பொலிஸார் இருபகுதியிலும் இருந்து ஏழு பேர் வீதம் பொலிஸ்நிலையம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இந்து சமூகத்தில் இருந்து ஏழு பேர் பொலிஸ் நிலையம் செல்ல பெரும்பான்மை சமூகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இவ்வேளையில் பொலிஸார் இவர்களைக் கலைக்க எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை.

இதனால் தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீது இருந்த சொற்ப நம்பிக்கையும் இல்லாமல் போகவே அவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஆலய நிர்வாகசபையைக் கூட்டி உற்சவத்தை இடைநிறுத்தியுள்ளனர். இதன் பின்பு பொலிஸாரின் காவலுடன் அலங்கார வேலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வேளையில் அப்பகுதிக்கு வந்த இனவாதிகள் வாழைமரங்களை வெட்டி கெட்டவார்த்தைகளால் ஆலயத்தில் நின்றவர்களைத் திட்டித் தீர்த்ததுடன், ஆலய நிர்வாகிகளை அச்சுறுத்தியும் உள்ளனர்.

இதன் பின்னர் இப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் பயந்தநிலையில் காணப்படுகின்றனர். பொலிஸார் இப்பகுதியில் எத்தகைய பாதுகாப்பு முன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால் மக்கள் மிகவும் அச்சுறுத்தலுடனேயே வாழ்கின்றனர்.

மேற்படி அச்சுறுத்தல் நிலைமைக்கு எதிராக இப்பகுதியில் உள்ள சாதாரண பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வுடனேயே உள்ளனர். ஆனால், கோயில் நிர்வாகத்தினரோ நிர்வாகசபையின் முடிவுக்கு கட்டுப்படுங்கள் எனக்கூறி மக்களின் உணர்வுகளை அடக்கிவருகின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவ இடைநிறுத்தம் பேரினவாதிகளின் செயற்பாட்டினால் நிகழ்ந்த ஒன்றாகவே கருதுகின்றோம். இந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து போராட வேண்டும் என்பதே மலையக இடதுசாரி முன்னணியின் எதிர்பார்ப்பாகும்.

இன்று அரசாங்கம் இத்தகைய முயற்சிகளைத் தடுத்து நிறுத்த முற்படினும் பேரினவாதிகள் அதை மீறி செயற்படும் நிலைக்குச் சென்றுள்ளனர். இந்த நாடு பௌத்த மக்களுக்கே சொந்தம் என்ற நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

இன்று வடக்கு, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தற்கொலைப் போராளிகளாக மாறுவதற்குப் பேரினவாதிகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளே அத்திவாரமிட்டன. இன்று மலையக இளைஞர்கள் அதே பாதைக்குச் செல்வதற்கு பேரினவாதிகளின் இத்தகைய செயற்பாடுகள் வழியமைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது.

எனவே ஆட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் தமிழ் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் கூடுதல் அக்கறை கொண்டு இத்தகைய நிலைமைகள் தோன்றாமல் தடுக்க முயலவேண்டும். மலையக மக்கள் தற்போது மலையக தலைவர்களின் செல்வாக்கின் கீழ் இருந்து விலகிச் செல்ல தொடங்கியுள்ளனர். மேலும், இந்நிலை தொடருமானால் மலையகத்திலும் போராட்டங்கள் பல வெடிக்கும் நிலையே தோன்றும்.

இவை தொடர்பாக மலையக இடதுசாரி முன்னணி தமது பிரதிநிதியை இப்பகுதிக்கு நேரடியாக அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையை பெற்றதுடன் இந்நிலை தொடர்பாக பல்வேறுபட்ட மத, சமூக, தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு இறக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகளையும் அழைத்திருந்தனர். வருகை தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிர்வாகிகள் அமைச்சர் ஒருவரை சந்தித்த பின்னர் எவ்வித அறிவித்தலும் கொடுக்காது இறக்குவானைக்கு திரும்பிவிட்டனர். ஆலய நிர்வாகிகள் வருகைக்காக காத்திருந்த பின்னர் கூட்டம் வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்படும் நிலையேற்பட்டது.

இன்று போராட்டம் நடத்தினால் அழிவுக்கு வழிதேடும் என்ற பல்லவியையே மலையக தலைவர்கள் இசைக்கின்றனர். போராடாமல் எங்கே என்றாலும் மக்கள் சுதந்திரத்தை பெற்றதுண்டா? தலைவர்கள் பெறும் சலுகைக்காக மக்கள் எவ்வளவு காலம் தான் பொறுமை காப்பார்கள். ஒரு குருவி கூட தனது கூட்டை காக்க எதிரியுடன் போராடியே வாழ்கின்றது.

மலையக மக்கள் மீது இன்று மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக பரந்துபட்ட போராட்ட முன்னணியின் அவசியம் இன்று உணரப்படுகிறது. சகல தரப்பைச் சேர்ந்து மதகுருமார்கள், வெகுஜன பிரதிநிதிகள் மட்டத்தில் அமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை தொடர்பாக மலையக இடதுசாரி முன்னணி அதிக கரிசனை காட்டி வருகிறது. ஆட்சியாளர்கள் மனம் போன போக்கில் பேரினவாத சக்திகளை செயற்பட அனுமதித்துள்ளனர். இது அவர்களுக்கே வினையாக மாறும் காலம் ஏற்படும். புத்தபெருமான் ஒருபோதும் இத்தகைய அநியாயங்களை தனது போதனையில் கூறவில்லை இன்று புத்தபெருமானின் பல்லை பெருமையுடன் காத்துவருகின்றோம் எனக்கூறிக் கொள்ளும் பேரினவாதிகள், அவரின் சொல்லை காக்க கவனம் எடுத்தால் நாட்டில் சமாதானம் மலரும்

Exit mobile version