Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்றைய தினத்தின் காட்சிகள் : இலங்கையின் அதிகார வர்க்கமும் அல்லலுறும் தமிழ் மக்களும்

இலங்கையில் இன்று நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகள் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் மக்களும் அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களும் எவ்வகையில் நேர்எதிரான வாழ்நிலைமைகளில் இருந்து வருகிறார்கள் என்பதனைக் காட்டியிருக்கிறது. மக்களின் சுபிட்ச வாழ்வில்; மாத்திரன்றி மக்கள் அவலத்தின் மீதேனும் எந்தவித அக்கறையுமற்ற ஒரு அதிகாரக்குழுவின் உருவாக்கம் இலங்கையில் ஏற்பட்டிருப்பதனையே இத்தகைய நிகழ்வுகள் திரும்பத் திரும்பப் போதிக்கின்றன. இதில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளை நாம் காண்பதரிது.

இலங்கையின் 63 வது சுதந்திர தின தேசிய விழா, கதிர்காமத்தில் ஆடம்பரமான முறையில் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இதற்காக விழா நடைபெறும் பகுதியில் 350 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விழா பெரும் விமர்சையாக நடைபெற்றிருக்கிறது. மங்கல வாத்தியங்கள் முழங்க வரவேற்புகள், வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் என பெரும் கோலாகலமான விழா நடைபெற்றிருக்கிறது. அரசியல் முக்கியஸ்தர்கள் அங்கு நிறைந்து நின்று கொண்டாட்டங்களில் பங்குபற்றியிருந்தார்கள். தொடர்ந்து பெரும் செலவில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

இந்த கொண்டாட்டங்களுக்கு நேர்எதிராக மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உட்பட நாட்டின் 9 மாவட்டங்கள் சேர்ந்த மக்கள் கடும் மழையினாலும் வெள்ளம் மற்றும் மண் சரிவினாலும் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

தற்போதைய கடும் மழையினாலும் வெள்ளம் மற்றும் மண் சரிவினாலும் இதுவரைக்கும் 5 பேர் மரணமடைந்துள்ளார்கள். 7 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 90 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துதிருக்கிறார்கள். 4 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது. வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்திருக்கிறது. பொருளாதர நடவடிக்கைகள் அழிந்து போயுள்ளன. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து கொண்டிருக்கின்றன. கிராமங்கள் பல நீரில் முழ்கி தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கின் சகல பகுதிகளும் மீண்டும் வெள்ளக்காடாகியிருக்கிறது. மட்டக்களப்பில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. பாடசாலைகள் மூடப்பட்டள்ளன. பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பில் பிரதான வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டிருக்கிறது.

திருகோணமலையில் கந்தளாய்க் குளம் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பாதையில் 4 அடி வெள்ளம் பாய்கிறது. இதனால் கந்தளாய்-திருகோணமலை போக்கவரத்து தடைப்பட்டுள்ளது. திருகோணமலை-மட்டக்களப்பு பாதையில் வெருகல் பகுதியில் 3 அடிக்கு வெள்ள நீர் பாய்வதனால் அங்கும் போக்கவரத்து தடைப்பட்டுள்ளது. திருகோணமலைக்கான பாதை தடைப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தில் மண்சரிவு நிகழ்ந்துள்ளது. பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முன்கோடைமடு கிராமத்தைச் சேர்ந்த (களுவாஞ்சிக்குடி) 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமக்கு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை எனக்கூறி கொட்டும் மழையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பூரிலிருந்து இடம் பெயர்ந்து மீளக்குடியேற அனுமதி மறுக்கப்பட்டு மல்லிகைத்தீவு, மணற்சேனை, பட்டித்திடல் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 500 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக உலர் உணவு நிவாரணம் வழங்கப்படவில்லை. கனடா மூதூர் அபிவிருத்தி ஒன்றியம் இந்த வாரத்தில் இவர்களுக்கான இரு நாளைக்குப் போதுமான உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறார்கள்.

இவையிரண்டிற்கும் நேர்எதிராக கொழும்பில் ஐ.தே.கட்சி அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்றைய தினம் நடத்தியிருக்கிறது. எதிர்ப்புப் பேரணி மீது இனந்தெரியாதவர்கள் ( வீடீயோக்களில் அவர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும்) தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள்

Exit mobile version