Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும் : கலந்துரையாடல்

(23.04.2011, சனிக்கிழமை , முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை)
(Scarborough Civic Centre)

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்துகின்ற யுத்த வெற்றிக்குப் பின்னும், அவ்வரசினால் முன் வைக்கப்படாத ஆய்வுக்குட்படுத்தப்படாத விடயமாகவே தொடருவதை நாமெல்லோரும் நன்கு அறிவோம். ஆனால் தமிழ் இனப் பிரச்சினையில் அரசியல் தீர்வென்பதன் முக்கியத்துவம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகவே இருந்து வருகின்றது.

ஆயினும் இவ்வாறான விடயங்களைப் புலத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் முன்னெடுப்பதில் பலத்த வாதப் பிரதி வாதங்களையும் , சர்ச்சைகளையும், சிக்கல்களையும் சந்தித்து வருகின்றார்கள். மற்றும் இவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஓன்று, தமிழ் மக்களின் உடனடி நலன்களைக் கருத்தில் கொள்வது. மற்றயது, நீண்ட கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. எனவே இங்கு இவை தொடர்பான ஊக்குவித்தல்களை உருவாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம் பெயர் தமிழ் சமூகத்திற்கு உண்டு.

இந்த மையப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் , சமூக , பண்பாட்டு விடயங்கள் தொடர்பாக முற்போக்கான தளத்தில் பயணிக்கக் கூடிய காத்திரமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில் புத்திஜீவிகளின் பங்கினைக் கோருதல் இன்றைய சூழலில் அத்தியாவசிமானதொன்று. இதனைச் சாராம்சமாகக் கொண்டு செயற்படுதலுக்காக அமைக்கப்பட்ட குழுமமே ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டமாகும்.

இந்த அடிப்படைகளில் “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும்,அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் மாநாடு ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது..

-ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் –

Exit mobile version