Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்றைய அரசியல் நகர்வுகளும் புதிய திசைகளும்

newdirectionsதேசம், தேசிய இனம், தேசிய சிறுபன்மை, சிறுபான்மை தேசிய இனம், இனக்குழுஅல்லது எதுவும் அற்ற ஒரு கூட்டம் என்கின்ற வரையறைகளில் ஏதோ ஒன்றிற்குள் இலங்கைவாழ் மக்கள் பிரிவுகளை தத்தமது வியாக்கியானங்களிற்கேற்ப அல்லது தேவைகளிற்கேற்ப அடக்கிக் கொள்வதற்கு அரசியல் அறிஞர்கள், அரசியல் அமைப்புகள், போராட்டக்குழுக்கள், ஆளும் பிரிவுகள், பாசிசக்குழுக்கள் என்னும் முகாம்கள் பெரும் பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள்.

இவர்களின் இத்தகைய தாம் சார்ந்த அல்லது தாம் விரும்பும் பிரிவின் மேன்மையை நிறுவுவதற்கு, இலங்கைத்தீவில் அவர்களின் வரலாற்று தொன்மையை, பெருமையை நிறுவுவதும் மற்றவர்களின் வரலாற்றை சிறுமைப்படுத்துவது அல்லது இழிவுபடுத்துவது என்னும் வெட்கப்படத்தக்க போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு புனைகதைகளும், மதப்பித்தலாட்டங்களும் இன்னும் இருக்கின்ற மற்றும் இல்லாத வரலாற்று ஆதாரங்களும் துணைக்கழைக்கப்படுகின்றன.

பெரும்பான்மை, சிறுபான்மை என்னும் அளவுகோளின்படி ஒரு மக்கள் பிரிவின் இருத்தலையும் அதன் உரிமையையும் தீர்மானிக்க முனைகின்றனர். தேசிய ரீதியில் தங்களை அடையாளப்படுத்தி போராடும் மக்கள் பிரிவை;இனத்தேசியர்,மொழித்தேசியர்,மதத்தேசியர், “மார்க்சியதேசியர்” என்னும் வரையறைகளை வகுத்து அவர்களின் தேசிய அடையாளப்படுத்தலை பிற்போக்கானதாக காட்ட முனைகின்றனர். (இத்தகைய வரையறுப்புகளை மதிப்பிடுதல் இவ்வறிக்கையின் கருப்பொருளல்ல).

மார்க்சிய அல்லது முற்போக்கு வரையறை என்ற வகையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ்,லெனின், ஸ்டாலின், கிராம்சி ஆகியோர் அந்தந்த சகாப்தங்களில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வரையறுத்த விடயங்களை மத சுலோகங்களாக்கி எமது காதுகளில் ஓதுவதன் மூலம் அந்த வரலாற்று பங்காளிகளை இழிவுபடுத்துவதுடன், அவர்களின் பெயரால் உரிமைக்காக போராடுபவர்களுக்கு பிற்போக்கு முலாமும் பூசுகிறார்கள்.

தேசம், தேசிய இனம், இனத்தேசியம், மதத்தேசியம் போன்று இன்னும் பல சமூக ஆய்வுகளும், குறிப்பான வரையறைகளை வந்தடையும் எவருடைய முயற்சிகளும் தடுக்கப்படவேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு மக்கள் பிரிவின் அல்லது இனத்தின் வரலாற்று ஆய்வு அனைவருக்கும் பயன்படக்கூடியதே. ஆனால் ஒடுக்குமுறையாளர்கள், பாசிஸ்டுகள், பேரினவாதிகள், மார்க்சிய போர்வையில் ஜனநாயகத்தை மறுப்பவர்கள் ஆய்வு என்ற போர்வையில் இம்மக்களுக்கு எதிரான கருத்துக்களையே முன்வைக்கிறார்கள்.

இவர்களின் ஆய்வின் அடிப்படையில், ஓர் மக்கள் கூட்டத்தின் தலைவிதியை தீர்மானிக்க இவர்கள் யார்? ஒரு தேசம் பிரிந்து செல்லக்கூடாது அடிமையாகத்தான் வாழவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? ஒரு மக்கள் பிரிவின் தேசிய, இன, மொழி, மத உரிமைகளை எந்தவித கொள்கையையும் திரித்து சொல்லி மறுப்பவர்கள் எவரும் மக்களின் எந்த அடிப்படை உரிமைக்காகவும் போராட தகுதியற்றவர்கள். இவர்களின் “முற்போக்கு, ஜனநாயக” சொற்பொழிவைவிட எதிரியின் துப்பாக்கி குண்டுகள் ஆபத்து குறைந்தவையே!

சிங்கள மக்களின் ஒரு சாராரில் இருந்து வரும், பெரும்பான்மை இனம் அல்லது வரலாற்றில் தொன்மையான இனம் மட்டுமே தேசமாகும் தகுதியுடையது, அதற்கு அடுத்தபடியில் இருக்கும் அனைவரும் தேசிய சிறுபான்மையினர் என்னும் கருத்து ஓர் அப்பட்டமான பேரினவாதமாகும். ஈழத்தமிழரில் ஒரு பிரிவினர், முஸ்லீம் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகவும் அதே நேரம் தேசமாகவும் கூட அடையாளப்படுத்தும் போது, ஒரே மொழிபேசும் காரணத்தை மட்டும் வைத்து அவர்களையும் தமிழர் என வலிந்து வகைப்படுத்த முனைகிறது தமிழ் குறுந்தேசியவாதம். மலையக மக்களின் தனித்தன்மையை இலங்கைக்குள் அங்கீகரிக்காது, அவர்களை இன்னும் இந்திய மக்களாக பார்க்கும் சிங்கள மக்கள் பிரிவின் பேரினவாதம்; ஈழத்தமிழர்களின் குறுந்தேசியப் பிரிவின் மலையக மக்கள் மீதான புறக்கணிப்பு என இருமுனைகளில் ஒடுக்குமுறைகளை எதிர் கொண்டு வருகின்றனர் மலையக மக்கள்.

ஒரு தேசம், இனம், மக்கள் கூட்டம் தான் வாழும் சமூகத்தில் எவ்வுரிமையுடன் வாழவேண்டும் என்பதையும் சக மக்கள் பிரிவுடன் எவ்வகை உறவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அது தானாக தீர்மானித்துக்கொள்ளும். இதற்கு அந்தச் சமூகத்தை விளங்கிக் கொள்ளாத, அந்தச் சமூகம் சாராதவரின் எந்த போதனைகளும் உதவப் போவதில்லை. ஏனெனில் தேசியம் என்பது ஒரு மக்கள் பிரிவின் சுய தெரிவு.

ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டம், சிலர் கூறும் வரையறைகளுக்கேற்ப ஒரு தேசமாகவோ, ஒரு தேசிய இனமாகவோ இருந்தால் மட்டுமே அம்மக்கள் தேசிய உரிமையின் அனைத்து அங்கங்களுக்காவும் போராடலாம் என்பதும், குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் மட்டுமே போராடவேண்டும் என்பதும், போராடும் ஜனநாயகத்தை தந்திரமாக மறுப்பதாகும்.

குறிப்பிட்ட மக்கள் பிரிவு எவ்வகைப்பட்டது என்னும் வரையறை, அது நிலைத்திருக்கும் சகாப்தம், வாழும் உலகின் பகுதி, கூடி வாழும் சக மக்களின் வாழ் நிலை, உறவு; தன்னை ஒருவகை மக்களாக உணர்ந்து கொள்வதற்கான அடையாளங்கள், வரலாறு, கலாச்சாரம், மொழி, வாழும் பிரதேசம் என்று பலவகை காரணங்கள் பங்காற்றுகின்றன. இதில் அனைத்து வரையறைகளும் அமையப்பெற்றால் மட்டுமே அம்மக்கள் தேசமாகப் பரிணமிக்க முடியும் என்ற எந்த அவசியமும் இல்லை. குறிப்பாக தெற்காசிய தேசியங்களின் தேச உருவாக்கம் மற்றும் தேச வரையறைகள் மிகச்சிக்கலானவை.; இது தொடர்பான ஆய்வுகளும், வறட்டு கோட்பாட்டு வரைவிலக்கணங்களும் இது வரை இம்மக்கள் பிரிவுகளுக்கு எவ்வகை உதவியையும் புரிந்தவையாக இல்லை. அறிஞர்களின் விவாதப்பொருளாகவோ அல்லது வறட்டு வாதிகளின் சூத்திரப்பொருளாகவோ மட்டுமே இருந்து வருகிறது.

தேசியம் என்னும் மக்களின் தெரிவு, அவர்கள் தொடர்ந்தும் அவ்வடையாளத்திற்காக போராட வேண்டிய தேவை இருக்கிறது என்று உணரும் வரை போராடிக்கொண்டுதான் இருப்பார்கள். இது யார் தலைமையில் நடக்கிறது என்பதல்ல இங்கு முக்கியம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை அடையவேண்டும். இதை ஜனநாயகத்தை விரும்புபவர்கள் ஆதரிக்கவேண்டும். தேசிய உரிமைக்கான போராட்டம் உழைக்கும் மக்களை பிளவு படுத்தும், இனவாதத்தை வளர்க்கும் என்று வாதிடும் “முற்போக்காளர்கள்” ஒடுக்கப்படும் மக்களை விடுவிக்கும் பலத்தில் இருப்பார்களாயின் தேசிய உரிமைக்காக போராடும் மக்களே ஐக்கியத்தை நாடி அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

ஈழத்தமிழர், முஸ்லீம்கள், மலையக மக்கள் ஆகியோர் இலங்கை தீவில் தேசிய அடிமைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. அடிமைக்கு சுதந்திரம் வேண்டும்! விடுதலை வேண்டும்! அதன் பின் தான் அவர்களின் அடுத்தகட்ட சுபீட்சமான வாழ்வைப்பற்றிச் சிந்திக்க முடியும். அடிமையும் ஆண்டானும் சேர்ந்து பகல்கனவு காண அழைக்கும் ஏமாற்று அரசியலை நாம் தொடர்ச்சியாக எவ்வித சமரசங்களிற்கும் இடமின்றி அம்பலப்படுத்துவோம்.

இலங்கையில் இன்று தாண்டவமாடும் சிங்கள, பெளத்த தேசிய ஒடுக்குமுறையில் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர்,முஸ்லீம்கள் மலையக மக்களின் ஐக்கியமும், இணைந்த வேலைத்திட்டங்களும் பிரதானமானவை. சிங்கள மக்களில் இருந்து இதுவரை குறிப்பிட்டு சொல்லும் படியாக எந்த சக்தியும் இவ்வொடுக்கப்படும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. முற்போக்கு என்று கூறிக்கொண்டு முன்வந்திருக்கும் சில அமைப்புகள், முழுச்சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் உரிமை பற்றி பேசுபவர்கள், அவர்களின் கொள்கை தொடர்பான எந்த ஆவணங்களையும் தமிழிலோ குறைந்த பட்சம் ஆங்கலத்திலோ கூட வெளிக்கொண்டு வரவில்லை. இதுதான் அவர்கள் வைக்கும் சமவுரிமை!

இவர்களுடன் ஒட்டுண்ணியாக, அனைத்தையும் தமிழ் மக்களிடம் நியாயம் கற்பித்துக் கொண்டு ஒரு அரசியல் பிழைப்பு நகர்ந்து செல்கிறது. இது ஒடுக்கப்படும் மக்களிற்கு செய்யும் துரோகம்.இலங்கையெனும் ஓர் உன்னதமான தீவினிலே அனைத்து மக்களுடனும் சமமாக, ஏற்ற தாழ்வற்ற ஒரு சமூகமாக வாழ விரும்பாதவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமே.

தேசிய ஒடுக்குமுறை தான் இலங்கை சமூகத்தில் இனவாத நஞ்சை விதைத்து மக்களை ஒன்றுபட விடாமல் பிரித்து சமூக முன்னேற்றத்தை தடுக்கிறது ஆனால் இதற்கெதிராக போராடுவது பிரிவினை வாதம் என்றும்; தேசிய அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகிறவர்கள் குறுந்தேசியவாதிகள் என்றும்; அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட தேசியர்களின் உரிமைகளை அங்கீகரித்து, சிங்கள மக்களில் இருந்து நீட்டப்படும் நியாயமான நேசக்கரத்தை இறுகப்பற்றிக் கொள்பவர்கள் தமிழின துரோகிகள் என்பதுமான வசைபாடல்களையும் கடந்தே மக்கள் விடுதலைப் போராட்டம் பயணிக்கவேண்டியுள்ளது.

தேசிய ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்பட்ட தேசியர்களாகிய எங்கள் உரிமைக்கான, விடுதலைக்கான போராட்டம் தொடரும்.

புதிய திசைகள்

Exit mobile version