Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று யுத்தத்தை விரும்புபவர்கள் இந்த நாட்டில் இருவர்;முதலாமவர் பிரபாகரன், மற்றவர் மகிந்த ராஜபக்ஷ:மங்கள சமரவீர .

05.11.2008.

அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர்வையில் ராஜபக்ஷ அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்குமே முனைப்புக் காட்டி வருகின்றது. இன்று யுத்தத்தை விரும்புபவர்கள் இந்த நாட்டில் இருவர் மட்டுமே ஆகும். முதலாமவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இவர்களிருவருக்கும் யுத்தம் இல்லாவிட்டால் தம்மால் நிலைத்திருக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர  ஆரம்பித்திருக்கும் பாதுகாப்புக் கண்காணிப்பகத்தின் முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். கொழும்பு ரொஸ்மிட்பிளேஸிலுள்ள அதன் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

அங்கு மங்கள சமரவீர தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது;

விடுதலைப் புலிகளை சர்வதேசம் தடை செய்ய வேண்டும். என்று வெளிவிவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த போது கூட சர்வதேச நாடுகளிடம் கேட்கவே செய்தேன். அதன் அர்த்தம் தமிழ் மக்களையோ புலிகளையோ அழிக்கவேண்டுமென்பதற்காக அல்ல. விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள செய்யும் முயற்சிக்காகவே அதனைக் கையாண்டோம்.

ஆனால், இன்றைய மகிந்த அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு தமிழினத்தை அழித்தொழிக்கும் ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுவருகின்றது. இனப்பிரச்சினை இல்லையென்றும் கூறமுடியாது. எமது நாட்டில் நீண்ட காலமாகவே இனநெருக்கடி காணப்படுகின்றது. இதற்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டே ஆகவேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அவர்களது இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். நாமும் கூறுவது ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்தீர்வொன்றைக்காண வேண்டும். சமஷ்டித்தீர்வால் நாடு பிளவுபட்டு விடாது அப்படிக்கூறுபவர்கள் தான் இனவாதிகள் என்று நான் சொல்வேன்.

இங்கு அரசின் பயங்கரமானதொரு திட்டத்தை அம்பலப்படுத்த விரும்புகின்றேன். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் பொலிஸ் இராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபிக்க இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கிராமிய மட்டத்தில் இதற்கான உளவுப் பிரிவுகளை அமைக்கும் பணியை இரகசியமாக செய்து வருகின்றார். இதற்கான குழுவின் தலைவராக சிறந்த புத்தி ஜீவியான எம்.டி.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு பொலிஸ் இராஜ்ஜியம் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. இத்திட்டத்துக்கு கோதாபய இட்டிருக்கும் பெயர் புலனாய்வுப் பிரிவு மறுசீரமைப்பு என்பதாகும்.

நாட்டில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எமது எதிர்காலச் சந்ததியினர் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனை தென்னிலங்கை மக்கள் உடன் புரிந்து கொள்ளத்தவறினால் பிற்காலத்தில் பாதிப்படைய நேரிடலாம் எனவும் மங்களசமரவீர எச்சரித்தார்.

Exit mobile version