Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று யாழ்.பல்கலைகழ பழைமாணவர்களின் ஒன்றுகூடல் : பங்களிப்பு அவசியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கக் குழு ஒன்றின் ஒன்று கூடல் இன்று லண்டனில் நடைபெறுகிறது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் என்ற அடிப்படையில் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களின் முன் முயற்சியை பலரும் வரவேற்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது உயர்கல்வி என்ற வரையறைக்கு அப்பால் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் காத்திரமான பங்களிப்பு வகித்திருக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் உட்பட பல ஜனநாயகத்திற்கான போராட்டங்களை முன்நின்று நடத்திய வரலாற்றைக் கொண்டது. இவ்வாறான போராட்டங்கள் கூட வன்னிப் படுகொலையின் பின்னான காலத்தில் பல அரசியல் வியாபாரிகளின் சொந்த நலனுக்காகப் பயன்பட்டுத்தப்பட்டுள்ளமை துயர்தரும் நிகழ்வுகள்.
ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் புலம் பெயர் கூறுகள் மக்கள் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பு வகிப்பதற்குப் பதிலாக போரின் அவலங்களை தமது தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழல் எதிர்கொள்ளப்பட வேண்டும்.
இன்று பல்கலைக் கழகத்தில் கல்விகற்பதென்பது கூட பாதுகாப்புப் படைகளுடன் வாழ்விற்கான போராட்டமாகத் தொடர்கின்ற சூழலில், இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளைச் சர்வதேச மயப்படுத்துகின்ற, பல்கலைக் கழக மட்டங்களில் பிரசாரப்படுத்துகின்ற இடைத்தளமாக பழைய மாணவர் அமைப்புக்கள் பயன்படலாம்.
இவற்றிற்கு அப்பால், தனிமனித அடையாளம், பணச் சேர்ப்பு, யாப்பு வரைதல் போன்ற தன்னார்வ நிறுவன மாதிரியைப் பின்பற்றும் நிலை எதிர்கொள்ளப்பட வேண்டும். போர் தொடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரிவின் அங்கங்களாகச் செயற்படுகின்ற அமைப்பாக இவை மாற்றமடைய வேண்டும். இந்த நோக்கிலிருந்து இன்றைய நிகழ்வில் சமூகப்பற்றுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் பங்காற்றல் காத்திரமான மாற்றங்களை உருவாக்கும்.
Next to Stoneleigh amman Temple ( St/Johns Ambulance Hall 4 ,Dell lane Stoneleigh,Surrey,KT17 2NE)

Exit mobile version