Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று இரண்டு கால் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை : மனோ கணேசன்

முன்னேஸ்வரத்தில் நாலு கால் பிராணிகளை பாதுகாக்க புறப்பட்டவர் ஊரில் இன்று இரண்டு கால் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை

– ஊடக சந்திப்பில் மனோ கணேசன்

முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில் ஆடுகளையும், கோழிகளையும் பலியிட வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவரின் தொகுதியில் இன்று மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரண்டுகால் பிராணிகளுக்கு இருக்கும் பாதுகாப்புகூட இன்று, இந்த ஆட்டு பாதுகாவலரின் ஊரில் இரண்டு கால் மனித பிராணிகளுக்கு கிடையாது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை, ஆளும்கட்சியின் களனிய பிரதேச சபை உறுப்பினரின் படுகொலை படம் பிடித்து காட்டுகிறது.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்காமல் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு விதிகளை இந்த அரசாங்கம் மீறுகிறது. அரசாங்கமே சட்டத்தை மதிக்காவிட்டால் மக்கள் எப்படி மதிப்பார்கள்? எனவே இந்த சட்டம் ஒழுங்கு சீரழிவையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வுக்கான தேசிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும்போது, அது நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறதா என்பது தொடர்பாக சிலவேளைகளில் வழக்கு தொடரப்படும். இப்படியான வேளைகளில், பாராளுமன்றத்தில் சட்டமூலம் விவாதிக்கப்படுவது இடைநிறுத்தப்படும். குறிப்பிட்ட சட்டம் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறதா என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையிலேயே சபாநாயகர் செயல்படுவார். இது வழமையான நடைமுறை.

இந்த முறை இப்படி திவிநேகும சட்டமூலம் தொடர்பிலும், பிரதம நீதியரசரின் மீதான குற்றப்பிரேரணை தொடர்பிலும் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளது. திவிநேகும சட்டமூலத்தை அரசாங்கம் விரும்பியபடி சட்டமாக்கிக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்பதால் இந்த அரசாங்கம் பிரதம நீதியரசர் மீது கோபம் கொண்டுள்ளது. இதுதான் உண்மை.

இந்த நாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. ஒன்பதாவது மாகாணம் வட மாகாணம். அந்த மாகாணத்தில் இன்று மாகாணசபை இல்லை. இதற்கு யார் காரணம்? இந்த அரசாங்கம் அங்கு தேர்தல் நடத்தவில்லை. நடத்தினால் அங்கு ஆளும் கூட்டணியின் ஆட்சியை அமைக்க முடியாது என இவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் இன்று அங்கு மக்களாட்சி இல்லை. முன்னாள் இராணுவ அதிகாரியின் ஆட்சி இருக்கிறது. இவர் எப்படி வட மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்? எனவேதான் திவி நெகும சட்டமூலம் சட்டவிரோதமானது என்கிறோம். இதில் இருந்துதான் இன்று இந்த பிரச்சினை ஆரம்பித்தது.

நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சைக்கு நாங்கள்தான் காரணம். நாங்கள்தான் இந்த சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றோம். எனவே இதனால்தான் இன்று பிரதம நீதியரசர் அரசின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை விட்டு ஒதுங்க நாம் தயார் இல்லை. கடைசிவரை போராட முடிவு செய்துள்ளோம்.

இன்று நீதிமன்றத்தின் ஆணையை இந்த அரசு மீறுகிறது. குற்றப்பிரேரணையை பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் சேர்க்காதீர்கள், அது சட்ட விரோதம் என நீதிமன்றம் சொல்வதை அரசு கேட்க மறுக்கிறது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு, நீங்களும் சட்டத்தை மீறுங்கள் என, இந்த அரசு சொல்லாமல் சொல்லி முன்னுதாரணம் வழங்குகிறது. இதனால்தான் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போயுள்ளது. இந்நாட்டில் இன்று நான்கு கால் விலங்குகளுக்கு இருக்கும் பாதுகாப்புகூட மனிதர்களுக்கு இல்லை என்ற நிலைமை உதயமாகியுள்ளது.

Exit mobile version