மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்களாக ஆறுபேர் இன்று (06) மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ பீடத்தை சேர்ந்த ஐவர், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூவர் என 10 மாணவர்களை விசாரணைக்கென ஒப்படைக்குமாறு பொலிஸாரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படியே இம்மாணவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரையும், மருத்துவ பீடாதிபதி மற்றும் அம் மாணவர்களது பெற்றோர்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன், முகாமைத்துவ பீடாதிபதி மற்றும் துணைத் தலைவருடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் விஞ்ஞானபீட மாணவர்கள் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மற்றைய மாணவன் ஆகிய நால்வரும் இன்று மாலை பொலிஸில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவித்திருந்த போதும் அவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்களா? இல்லையா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவர் தொடர்ந்தும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் யாழ் பல்கலைக்கழக எழுச்சிகளைத் தொடர்ந்து பரவலாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தனித் தனியான கைதுகளால் அவலத்தில் வாழும் மக்கள் கூட்டத்தின் உரிமைப் போராட்டங்களை நசுகுவதற்காக இலங்கை அரசு முயல்வதாகத் தெரிகிறது.
ராஜபக்ச பாசிசத்தின் அடியாள் கும்பல்களான டக்ளஸ் தேவனந்தாவின் தலைமையிலான துணைக்குழுப் படைகளும், அதன் முன்முகங்களான ஏனைய குழுக்களும் இன்னொரு இரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதுவதற்கு துணைசெல்கின்றன.
உலக மக்கள் இதனைத் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இவற்றிக்கு எதிராக சமூக அக்கறையுள்ள சக்திகளின் நிதானமான அரசியல் நகர்வு அவசியமாகிறது. இன்று கேட்பதற்கு யாருமற்ற நிலையில் இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் அன்னிய சக்திகளின் வலைக்குள் விழுந்துள்ளது. ராஜபக்ச பாசிசம் தனது நச்சு வேர்களைப் பரப்பியுள்ள நிலையில் சர்வதேச ஜனநாயக முற்போக்கு சக்திகளிடையேயான ஒருங்கிணைந்த போராட்டம் அவசரமானது மட்டுமன்றி அவசியமானதுமாகும்.
இந்த நிலை தொடருமானால் கேட்பாரற்று தனிமைப்படுத்தப்பட்டு தமிழ்ப் பேசும் மக்கள் சுத்திகரிக்கப்படுவார்கள்.