Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னொரு பிள்ளையான் : இந்தியா விருப்பம்?

சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் “லக்பிம” ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் “லக்பிம”வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பான தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்காவுடன் இந்தியா ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது.அதிகாரபூர்வமற்ற ஒரு செயற்பாட்டை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் இது தொடர்பில் செய்துள்ளன என்று வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தலா மூவர் கொண்ட இந்தச் செயற்பாட்டுக் குழுவில் இந்தியத் தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் வியஜ் சிங் ஆகியோரும் சிறிலங்காத் தரப்பில் அரச தலைவரின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், அரச தலைவரின் அரசியல்துறைச் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் சிறிலங்காவுக்குச் சென்றிருந்த இந்திய உயர்மட்டக்குழு சிறிலங்கா குழுவைச் சந்தித்திருந்தது.

இக்கலந்துரையாடல்களில் ஓகஸ்ட்டில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் பேசப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தில் பங்குபற்றுமாறு சிறிலங்கா பல தடவைகள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ள போதும், அரசியல் காரணங்களை முன்நிறுத்தி இந்தியா அதனை நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிழக்கில் சிறிலங்கா அரசு நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கை போன்றதொரு நடவடிக்கையை வடக்கிலும் நடத்த வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக புதுடில்லிக்கு நெருக்கமான ஊடகவியாலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version