நாட்டில் மீண்டும் தமிழ் சிங்கள இனவாதத்தை தூண்டி விட்டு அதில் அரசியல் குளிர் காய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நாட்டுக்கோ மக்களுக்கோ எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்களின் வெற்றிக்காக மாற்று அரசியல் கொள்கைக்காக இம்முறை ஜே.வி.பி. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குகின்றது. இதற்கான துண்டுப் பிரசுர விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு பயந்து ஒரு போதும் நாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் ஆட்சி பீடத்தில் இருந்து வந்துள்ளன. தற்போது 63 ஆண்டுகள் கடந்தும் அதே நிலையே காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். புதிய மாற்று அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பினால் மக்கள் உயிர் வாழ முடியாமல் போயுள்ளது. இன்று தேங்காய், முட்டை, கோழி என்பன கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர யுத்தம் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருட காலம் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்விதமான தீர்வையும் அரசாங்கம் முன் வைக்கவில்லை. தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயற்பாட்டைக் கூட இதுவரையில் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
மாறாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளைஞரை தூண்டிவிட்டு அதில் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவே தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரச மொழியில் ஆரம்பமான முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தேசிய கீதத்தின் ஊடாக கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது. எனவே இதனை தொடர விட முடியாது.
புதிய வருடத்தில் புதிய ஆட்சியொன்றை ஏற்படுத்துவோம். இதற்கான போராட்டத்தை இன்று முதல் ஜே.வி.பி. முன்னெடுக்கும். அதற்கு அமைவாக ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட மட்டத்தில் கூட்டங்கள் என பல கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். புதிய தேர்தல் முறைமை தொடர்பாக வாய் கிழிய பேசிய அரசாங்கம் தற்போது அதனையும் கைவிட்டுள்ளது என்றார்.