Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை

Parai_voice_of_freedomஎமது தேசத்தின் ஒவ்வொரு திரும்பு முனைகளிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் முத்திரை பதிக்கப்படுகின்றது. சாரிசாரியாக மனித உயிர்களைக் கொன்று குவித்த இலங்கைப் பாசிச அதிகாரவர்க்கம் தேசிய இன ஒடுக்குமுறையை எல்லாத் தளங்களிலும் முடுக்கிவிடுகின்றது. அதற்கெல்லாம் மேற்கு ஏகபோக நாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் துணை செல்கின்றன. பண்பாட்டுச் சிதைப்பு, நில ஆக்கிரமிப்பு போன்ற வடிவங்களின் புதிய கட்டமாக நீரையும் விளைநிலத்தையும் அழிக்கும் திட்டத்தைப் பல்தேசிய வியாபார நிறுவனங்களுடன் இணைந்து முடுக்கிவிட்டுள்ளது.

சுன்னாகம் அனல் மின் நிலையத்தில் கழிவு எண்ணையைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் MTD Walkers என்ற நிறுவனம் நச்சுப்படிந்த கழிவு எண்ணையை உலகின் சுற்றுச் சூழல் சட்டங்களுக்கு முரணாக மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கிராமங்களில் கிணற்று நீர் பவனைக்கு உதவாத நஞ்சாக மாற்றமடைந்துள்ளது. விளை நிலங்களில் பயிர்ச்செய்கை சாத்தியமற்றதாக்கப்படுகின்றது. தண்ணீருக்கும் உணவிற்கும் அன்னியர்களை நோக்கிக் கையேந்தும் நிலை ஏற்பட்டுவருகிறது.
சுய பொருளாதாரத்தையும் சுய உற்பத்தியையும் அழிப்பது என்பது தேசியத்தைச் சிதைப்பதற்கான இறுதிச் செயற்பாடாகும்.

இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சமூக ஆர்வலர்களை இலங்கை அரசும் மின் உற்பத்தி நிறுவனமும் பயங்கரவாதிகள் எனப் பயமுறுத்துகின்றன.

நமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் சமூகப் பொறுப்பை உணர்ந்து கொண்ட நாம் மக்கள் பற்றுள்ள ஏனையோருடன் இணைந்து இன்று – 22.12.2014- ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் கிளை முன்பாகப் போராட்டம் ஒன்றை நடத்தினோம்.

மின்னுற்பத்தி நிறுவனமான MTD Walkers ஐ இயக்குபவர்களில் ஒருவர் ஆளும் பழமைவாதக் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா என்பவர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்ஜ் தேவா என்பவர் சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றச் செயலை நிறுத்த வேண்டும் என்றும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியே இப் போராட்டம் நடத்தப்பட்டது.
பறை ஒலி முழங்கிய போராட்டத்தின் இடையில் திரு.சத்தியசீலன் அவர்கள் ஐரோப்பியப் பாராளுமன்ற லண்டன் செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கையளித்தார்.
இறுதியில் பறை – விடுதலைக்கான குரல், நாடுகடந்த தமிழீழம், தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் உரையாற்றினர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக நிர்ஜ் தேவாவின் தேர்தல் தொகுதியில் அவரின் குற்றச் செயல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட உள்ளன. தவிர, நிர்ஜ் தேவாவிற்கு எதிரான வழக்கும், நிறுவனத்திற்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. குரல்வளை நெரிக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுக்க மக்கள் பற்றுள்ள அனைவரையும் பங்காற்றுமாறு அழைக்கின்றோம்.

Exit mobile version