யாழ்.மாவட்டத்தில் வீதியின் ஒவ்வொரு சந்தியிலும் படை முகாம்களும், பத்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் படையிரும் உள்ளபோது, அவர்களுக்கு தெரியாமல், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டார் என்ற கருத்தை நாம் நம்பத் தயாரில்லை, என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.
அப்படி அவர்களுக்குத் தெரியாமல்தான் இது நடந்திருந்ததென்றால் அவர்கள் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலன்
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இராணுவத்தினருக்குத் தெரியாமல் அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான இந்தத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை, அவ்வளவு தூரம் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவத்தினரும், பொலிஸாருமாக 55ஆயிரம்பேர் இங்குள்ளனர். எனவே அவர்களுக்குத் தெரியாமல், அவர்களை மீறியே இது நடந்ததென்றால், அவர்களால் மக்களுக்கான, மாணவர்களுக்கான பாதுகாப்பை கொடுக்கமுடியாது.
இதுவே குடாநாட்டில் நடந்திருக்கின்ற முதல் சம்பவம் கிடையாது. இதுவரை பல சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஆனால் இதுவரையில் எந்த சம்பவத்திற்க்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஜனநாயகத்தைப் பறித்தவர்கள், அராஜகம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை, சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவும் இல்லை.
ஆனால் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றது. இதுதான் மாற்றமடையாத நிலைமை என்றால் அரசாங்கம் பொதுமக்களுக்கும், மாணருக்;கும் கொடுக்கும் பாதுகாப்பு என்ன?
முற்று முழுதாக அரசாங்கத்தின் ஏற்பாட்டிலேயே இது நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டாகவேண்டும், மேலும் இவ்வாறு கோழைத்தனமாக, மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை மாணவ சமூகம் கடுமையாக எதிர்க்கிறது.
தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவற்றுக்கெதிராக ஒரே குரலில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் கிளர்ந்தெழுவோம்,
இதேபோல் நடந்துமுடிந்த தாக்குதலுக்கு எதிர்புத்தெரிவித்து அடுத்த சில தினங்களில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தவிருக்கின்றோம்.
மேலும் தெற்கில் ஒரு பல்கலைக்கழகத்தில் பிரச்சினை நடந்தால் அதன் எதிரொலிப்பு மற்றப் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும், ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஒரு பிரச்சினை நடந்தால் அது ஏனைய பல்கலைக்கழகங்களில் எதிரொலிப்பது கிடையாது.
இந்த நிலை மாற்றியமைக்கப்படும்,இனம் தன் ஒரு னுடைய பிரச்சினைகளுக்காக தனித்து நின்று போட்டியிட்டதே நடந்து முடிந்த இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமானது.
வடக்கிலுள்ள அனைத்து மாணவ சமூகத்திற்காகவும் குரல் கொடுப்போம், தேசியளவில் மாணவ சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் தொடர்ந்தும் போராடுவோம்,
இந்தத்தாக்குதல் முற்று முழுதாக அரசாங்கத்தினாலும், அதனுடன் சேர்ந்தியங்கும் பாதுகாப்புத் தரப்பினராலுமே நடத்தப்பட்டது, இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிக்கமாட்டோம் என்றார்