அரசியல் தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை நடைறைப்படுத்த முடியாது. இதற்கான காரணத்தை கூட்டமைப்பினருக்கும் இந்தியாவிற்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விளக்குவார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
பிரிவினைவாதத்திற்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அரசியல் தீர்வு என்ற போர்வையில் நாட்டிற்குள் சுயாட்சியை முன்னெடுக்க பயங்கரவாதத்தின் நிழல் மனிதர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக குணதாச அமரசேகர தொடர்ந்தும் கூறுகையில்,
13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வு ஒரு போதும் தேசிய அரசியலில் இடம்பிடிக்காது.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக யாராவது 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்வார்களாயின் அவர்கள் நாட்டை துண்டாட பின்னணியில் இருந்து செயற்படுபவர்களாவர்.
இந்தியாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒவ்வாத விடயத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதை முறையாக தெளிவுபடுத்த வேண்டியது நம் அனைவனதும் கடமையாகும்.
இதற்காக விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விசேட சொற்பொழிவாளராக பாதுகாப்பு செயலாளர் உரையாற்றுவார். இந்நிகழ்வில் புத்திஜீவிகள், இராஜதந்திரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்றார்.