26.03.2009.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லையென தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவின் தேவைக்கேற்பவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் திங்கட்கிழமை தன்னை அமைச்சில் சந்தித்துப் பேசி, வடக்கில் இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாக்க சுகாதார அமைச்சும் அரசாங்கமும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறினார்.
இந்தியா மேலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இந்தியஇலங்கை உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இச் சந்திப்பின்போது கூறியதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேநேரம், இந்திய இலங்கை உறவுகள் மேம்பட்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறியிருக்கும் நிலையில் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வாக இந்தியா தெரிவித்து வரும் அதிகாரப் பகிர்வு யோசனையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்;
“”இந்தியா அவ்வாறான யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை என்றார். எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் தமிழ்நாடு சென்றிருந்த போதும் இந்திய வெளியுறவுத் துறைச்செயலாளர் சிவ்சங்கர் மேனன் அமெரிக்க விஜயத்தின் போதும் இலங்கை பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு அவசியமென தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டபோது;
இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமையவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவின் தேவைக்கேற்ப அப்போது இது நடந்தது.
எனினும் தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய எமக்கென்று குழுவொன்று நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். சிலவேளைகளில் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்த வேண்டி ஏற்படலாம். எனினும் முன் கூட்டியே ஒரு முடிவுக்கு வர முடியாது.
எவ்வாறிருப்பினும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிகாரங்களை பங்கிடுவது குறித்து ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார். அதற்கென்று ஒரு முறை இருக்கிறது என்று அமைச்சர் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.
விமல் வீரவன்ச
இதேநேரம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச இது பற்றி பேசுகையில்;
யுத்தத்திற்கு இந்தியா எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தால் அது இந்த இராணுவ வெற்றிகளுக்கு பெரும் பாதிப்பாக இருந்திருக்கும். ஏனெனில் அயல் நாடு என்ற வகையில் பிராந்தியத்தில் இந்தியாவுக்கே அதற்கான அதிக தேவை இருந்தது. எனினும் இந்தியாவை, எதிர்ப்புக் காட்டாமல் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முடிந்திருப்பதானது சந்தேகத்திற்குரிய விடயம்.
இதேநேரம், இந்திய முதலீட்டாளர்கள் இலங்கை வருவதே இன்று சிலருக்கு பிரச்சினையாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வளங்களை இந்தியா சூறையாடப்போவதாக கூறுகின்றனர். அப்படியென்றால் ஜப்பான் , ஈரான் போன்ற நாடுகளும் தான் சூறையாட வேண்டும். ஏனெனில் அவர்களும் இங்கு முதலீடு செய்துள்ளார்கள். கூற ஒன்றுமில்லாததால் இவர்கள் ஏதோவொன்றை கூறிக்கொண்டிருக்கின்றனர்.
எப்படியிருப்பினும் இலங்கைக்கு தேவையான வகையில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலேயே அரசியல் தீர்வு இருக்குமென ஜனாதிபதி உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஒற்றையாட்சி தேவையில்லையென்றால் பிரபாகரனை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே தீர்வு இலங்கைக்கு உரிய வகையில் இருக்குமே தவிர பிற நாடுகளின் அழுத்தங்களுக்கேற்ப இருக்காது என்றார்.