Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலையில் விதைத்ததை அறுவடை செய்யும் இந்திய நிறுவனத்தின் 300 மில்லியன் டொலர்கள்

கொழும்பில் ஐ.ரி.சி இன் திட்ட மாதிரி
கொழும்பில் ஐ.ரி.சி இன் திட்ட மாதிரி

இலங்கையின் இனப்படுகொலை வடுக்களின் மீது உலகின் பயங்கரக் கொள்ளைக்காரர்களும் கொடியவர்களும் ஏறி அமர்ந்துகொள்ள ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிறது. உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் பதுங்கு குழியாக இலங்கையை மாற்றி வருகிறது ராஜபக்ச கிரிமினல் அரசு. பல்தேசியப் பயங்கரவாதிகளின் தங்குமிடமாக மாறும் இலங்கையில் அவர்களின் தேவைகளைப் பூர்திசெய்யும் சேவைத் துறைகள் உருவாக்கப்படுகின்றன. சூதாட்ட மையங்கள், நட்சத்திர விடுதிகள், பாலியல் களியாட்டங்கள் போன்ற இத்தியாதிகள் இலங்கை முழுவதும் தோற்றுவிக்கப்படுகின்றன.

வன்னியில் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களதும் போராளிகளதும் கல்லறைகளிலிருந்து இன்னும் ஒலிக்கும் மரண ஓலத்தை சில்லரை வியாபாரிகள் பணமாக்கிக்கொள்ள மொத்த வியாபாரிகள் இலங்கையைச் சுரண்டிக்கொழுப்பதை அபிவிருத்தி என்று தலையங்கமிடுகின்றனர்.

இந்தியாவின் நகரங்களில் ஆடம்பர அடுக்கு மாடி நட்சத்திரவிடுதி போன்ற கொங்ரீட் பொந்துகளை அமைத்து வரும் இந்தியாவின் பிரபல நிறுவனமான ஐ.ரி.சி லிமிட்டட் கொழும்பில் 300 மில்லியன் டொலர் செலவில் நட்சத்திடவிடுதியையும் ஆடம்பர குடியிருப்புக்களையும் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் செல்வாக்கு மிக்க ஐ.ரி.சி நிறுவத்திற்கு காலி முகக் கடற்கரையில் அரச நிலங்களை இலங்கை அரசு இலவசமாக வழங்க இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.ரி.சி நிறுவனத்தின் தலைவர் இலங்கை அரசின் திட்டங்கள் உலகிற்கு முன்னுதாரணம் என்று ஆரம்ப விழாவில் பேசினார். ஆரம்பத்தில் 140 மில்லியன் டொலர்கள் செலவிலேயே கட்டுமானம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்ததாகவும் இலங்கையில் வளர்ச்சியைக் கண்ட பிறகு 300 மில்லியன் டொலர்களுக்கு அது உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

உலகின் அதிகாரவர்க்கங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் இலங்கை அரச பயங்கரவாதிகளின் அபிவிருத்தி மக்களுக்கானதல்ல மாறாக அவர்களைக் கொள்ளையடிப்பது.

நினைவு தினங்களைப் பேஸ்புக்கில் பதிவது, மின்னஞ்சல் அனுப்பி ஆறுதலடைவது, அவ்வப்போது அஞ்சலிக் கூட்டங்களை நடத்துவது, வீரவசனங்களைப் பேசிக்கொள்வது போன்ற நடவடிகைகளில் தமிழர்கள் தலைமைகள் சுய இன்பத்தை அனுபவித்துகொள்ள இலங்கையில் எந்தத் தடையுமின்றி பல்தேசியக் கொள்ளை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பல்தேசிய வியாபாரிகளான டாட்டா ஏற்கனவே சிலேவ் ஐலண்ட் என்ற இடத்தில் ஆடம்பரக் குடியிருப்புக்களை அரச காணிகளில் அமைத்து வருகின்றது.

இலங்கை இனக்கொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான பசில் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற்ற இத் திட்டத்தின் ஆரம்பவிழா இன்று கொழும்பில் நடைபெற்றது. பெரும் பணச்செலவிலான களியாட்டமாக நடைபெற்ற இந்த விழா இனப்படுகொலையின் குறியீடாகவும் அமைந்தது. இனப்படுகொலை இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவர்.

Exit mobile version