Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

அரசின் ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம், இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக உலகில் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனச் சாட்சி தட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பினால், புலம் பெயர் உறவுகளுக்கு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

புலம் பெயர் உறவுகளுக்கு,

அரசின் இராணுவ ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற பரிணாமத்தை எடுத்துள்ளது. வன்னியில் 109 தமிழ்ப் பெண்கள் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்தது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்ததன. பாரதிபுரத்தில் இருந்து அதிகமான பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

பலவந்தமாக மிரட்டப்பட்டே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்ற செய்திகளை ஊடகங்கள் தெரிந்துகொண்டு வெளியிட்டன. கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் தம்மைக் கொன்றொழித்தவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள்.

நேற்று 22.11.2012 அன்று இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், அவர்களது பிள்ளைகள் சொந்த விருப்பத்திலேயே இணைந்து கொண்டார்கள் என்று எழுதி கையொப்பம் போட்டுத் தருமாறு கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் ஈழத்திற்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக ஆரம்பித்த 80 களில் இருந்த நிலைமை வேறு, அழிவின் பின்னால் இன்றுள்ள நிலைமை வேறு. உலக நாடுகளின் ஆதரவோடு இனச் சுத்திகரிப்பு இங்கு நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தில் இளம் சிறார்களை இராணுவம் போதைப் பொருள் உபயோகத்திற்கு அடிமையாக்குகின்றது. பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவர்கள் மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் இராணுவத்தை நோக்கிச் செல்லுகின்றனர்.

காரைநகரில் நேவி முகாமுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் போதைவஸ்து அடிமைகளாகவே காணப்படுகின்றனர்.

மன்னாரிலும், திருகோணமலையிலும் போலித் திருமணப்பதிவு செய்யும் இராணுவம், வறிய தமிழ்ப் பெண்களை சீரழிக்கிறது. மட்டக்களப்பில் பாலியல் தொழிலை திட்டமிட்டு நடத்துகிறது.

இவற்றைப் பார்த்துக்கொண்டு கையாலாகாதவர்களாக நாங்கள் வாழ்கிறோம்.

கோதபாயவின் துணை இல்லாமல் குருவி கூடக் கத்த முடியாது.

நகர்ப் புறங்களில் இருப்பவர்களை சிறிதளவு சுதந்திரமாக விட்டுவிட்டு கிராமப்புறங்கள் வழியாக திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.
இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக உலகில் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனச் சாட்சி தட்டியெழுப்பப்பட வேண்டும்.

அடிமையாக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்கு ஆதரவாக உலக மக்கள் எழ வேண்டும். இன்றைய எமது நிலைமை மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கான பலம் புலம் பெயர் உறவுகளிடம் உள்ளது.

தனிநபர்கள் கூட உங்களுக்குத் தெரிந்த ஏனைய இன மக்களுக்கு மின்னஞ்சல், தொலை பேசி ஊடாக இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்புக் குறித்து நடந்த இனப்படுகொலை குறித்தும் தெரிவிக்கலாம். ஏனைய மொழி இணையங்களில் பின்னூட்டங்களாகத் தெரிவிக்கலாம்.

மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிகையோடிருங்கள். மனிதாபிமானிகளிடமும், ஜனநாயக முற்போக்கு வாதிகளிடமும் இலங்கை அரசைப்பற்றியும் அதன் இனச் சுத்திகரிப்புக் குறித்தும் பிரச்சாரம் செய்து உலகப் பொது அவிப்பிராயத்தை உருவாக்குங்கள். எங்களின் எதிர்காலத்திற்கு பணத்தையோ, உணவையோ உங்களிடம் எதிர்பார்பதைவிட இதனைத்தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

திருகோணமலை.

Exit mobile version