வன்னிப்படுகொலைகளை இந்தியாவுடனும், ஏனைய நாடுகளுடனும் இணைந்து திட்டமிட்டு நடத்திய கோட்டாபய ராஜபக்சவின் இந்தக் கூற்று இந்தியாவுடன் இணைந்து நடத்தும் இன்னொரு நாடகமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் சிறுகச் சிறுக படிநிலை வளர்ச்சிகண்ட தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிட்டு அழிப்பதற்காக இந்திய அரசால் நூற்றுக்கணக்கான போராளிகள் உத்திரப் பிரதேசத்திலுள்ள மலைப்பகுதியில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களிடையே மோதலை ஏற்படுத்தியது. திடீர்த் தாக்குதல்களை நடத்தி இலங்கை அரசை மிரட்டி தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டது. இவை அனைத்தும் கோட்டாபயவிற்கு மட்டுமல்ல அப்பாவி மக்களுக்கே தெரிந்த உண்மைகள்.
இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம், போரின் போது மக்கள் எழுச்சிகள எதிர்கொள்வதற்காக கருணாநிதி மற்றும் மத்திய அரசோடு இணைந்து நாடகமாடினோம் என்றெல்லாம் கூறிவந்த கோட்டாபயவின் புதிய திருப்பம் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.
இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்’ என்று மேலும் கூறியுள்ளார்.