வன்னியில் இலங்கை இந்திய அரசுகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆசியோடு நிகழ்த்திய இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா ஐ.நா அமைதிப்படையின் உயர்மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தெரிந்ததே. இந்த நியமனத்தின் பின்னணியில் வன்னிப் படுகொலைகளின் இரகசியங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதன்பின்னர் அமரிக்க நீதி மன்றம் சவேந்திர சில்வா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சிறப்புரிமைகளை கருத்தில் கொண்டே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிராக செயற்பட்ட சவேந்திர சில்வா மீதான வழக்கை தள்ளுபடி செய்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என ஸ்பீக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயிரக்கணக்கில் மக்களைப் படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் பதவிக்குள் வன்னியின் அவலங்களும் புதைக்கப்பட்டு விட்டன. அமரிக்க அரசினதும் அதன் அடியாளான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் திட்டமிட்ட இந்தச் செயற்பாட்டின் பின்னரும் அமரிக்கா ஈழத் தமிழருக்கு உரிமை பெற்றுத்தரும் என போலியான நம்பிக்கைகளை வழங்கிவரும் நச்சு அரசியல் வியாபாரிகள் இன்னமும் ஓயவில்லை.