இனப்படுகொலை அரசிடமிருந்து தப்பித்து தமது உயிரைப்பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணமான தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கொந்தளிக்கும் கடலின் நடுவே இனக்கொலை அரசின் கோரப்பிடிக்குள் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கபெறவில்லை.
தவிர, 50 பேருடன் பிந்தொடர்ந்தாகக் கருதப்பட்ட மற்றொரு கப்பலும் அவுஸ்திரேலியப்படைகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மனித உரிமை சட்டத்தரணி டேவிட் மனே கூறுகையில், அவுஸ்திரேலியப் பிரஜைகள் தகவலறியும் சட்டத்தின் அடிப்படையில் அகதிகள் குறித்து அறிந்துகொள்ளும் உரிமையுடையவரகள் எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியப் பிரதமர் ரோனி அபோட், அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்களா என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். போர் ஒன்றில் வெற்றிபெற்ற வெறிகொண்ட மனிதனைப் போல ஏ.பி.சி வானொலியில் பேசிய பிரதமர், தான் நடுக்கடலில் நடைபெற்ற சம்பவங்களின் விபரங்களை வெளியிடப் போவதில்லை என்றும், ஆனால் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அகதிகள் மீது குறிப்பாகத் தமிழ் அகதிகள் மீது அவுஸ்திரேலியா உட்பட அமெரிக்க ஏகாதிபத்திய அணிகள் தொடுத்துள்ள போரின் பேச்சாளர் போன்றே அவுஸ்திரேலியப் பிரதமர் நஞ்சைக் கக்கினார்.