Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்த நாட்டில் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது-இதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்பட்டாலும் கவலையில்லை : சரத் என் சில்வா

இலங்கையில் ஒரு இனமே உள்ளது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இனங்கள் இல்லையென தெரிவிக்கப்படுவதெல்லாம் பச்சைப்பொய் என தெரிவித்துள்ள இலங்கையின் உயர் பீடமான சட்ட பீடத்தின் தலைமை நீதிபதியான பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வவுனியா அகதிமுகாமில் உள்ள மக்கள் வார்த்தைகளினால் வர்ணிக்கமுடியாத துன்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அவர்கள் நம்மிடம் இருந்து நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

 
செட்டிகுளம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டேன். அவர்கள் மீது இலங்கை அரசு எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இலங்கையின் சட்டத்தின் கீழ் அவர்கள் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதை கூறுவதற்காக இலங்கை அரசு என்னை தண்டித்தாலும் பரவாயில்லை.

இங்கு; கட்டிடங்களை கட்டிக்கொண்டு ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அங்கு கூடாரங்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் வாழ்கின்றனர். கூடாரத்தின் மையத்தில் இருப்பவர்தான் நேராக நிற்க முடியும். கூடாரத்தின் மூலைக்களுக்குச் சென்றால் அவர்கள் கழுத்து முறிந்து போகும்.

உடல் கழிவை வெளியேற்றிக் கொள்வதற்குக் கூட 50 முதல் 100 மீற்றர் தூரமுள்ள நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இப்படித்தான் செட்டிக்குளம் முகாம்களில் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளை தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களுடைய துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூற முயன்றேன், முடியவில்லை. உங்களுக்கு நாங்கள் புதிய ஆடைகளைத் தருவேன் என்று கூற முயன்றேன், முடியவில்லை.
நிவாரண முகாம்களில் தங்களியுள்ள வன்னி மக்களின் துயரங்களை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெரும்பான்மை சிறுபான்மை என்று பாகுபாடு இல்லை என்றும் இலங்கை மக்கள் ஒரே இனம் என்றும் நாம் இனியும் கூறிக்கொண்டிருந்தால் அது முழுப் பொய்யாகவே இருக்கும்.
Exit mobile version