வன்னிப் போரின் முடிவிற்குப் பின்னர் ஈழத் தமிழ அகதிகள் ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பி உலங்கெங்கிலும் தஞ்சமடைகிறார்கள். உயிர் தப்பிச் செல்லும் அகதி மக்களை வைத்து பணம் சம்பாதிக்க விரும்பும் கூட்டமோ இம்மக்களை கப்பல்களில் ஏற்றி எங்காவது ஒரு நாட்டிற்கு அனுப்பி விடுகிறது. அல்லது இம்மக்கள் திக்குத் தெரியாத திசை வழியே சென்று மடிகிறார்கள். அல்லது உயிர் வாழ்கிறார்கள். என்கிற மிக மோசமான நிலை இன்று ஈழத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மலேஷியாவிலிருந்து கப்பல் ஒன்றில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வந்த மக்களை அந்நாட்டு கடற்படை இந்தோனிஷியா அரசிடம் சிக்க வைத்தது. பல வாரங்களாக இம்மக்கள் இந்தோனேஷியாவின் மேரக் துறைமுகத்தில் பல வாரங்களாக பரிதவித்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில்,
29 வயதான ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபருக்கு உடல் நலம் குன்றியது.அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதவி வரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தத் தகவலை ஆஸ்திரேலியாவின் சோசலிச கட்சி அதிகாரிகளுக்கு தமிழர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் குறித்து கப்பலில் உள்ள குமார் என்பவர் கூறுகையில், ஜேக்கப் கிறிஸ்டியன் மிகவும் மோசமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து வந்தார்.அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு நாங்கள் கோரியும் இந்தோனேசிய அதிகாரிகள் மறுத்து விட்டனர். மேலும் கப்பலுக்கும் மருத்துவர்களை அனுப்ப மறுத்து விட்டனர்.இந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்த மிக மிக ஆபத்தான கட்டத்தில்தான் உதவி வந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் நிச்சயம் ஜேக்கப் கிறிஸ்டியன் பிழைத்திருப்பார் என்றார்.சோசலிச கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அந்தோணி மெய்ன் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், இந்த துயரத்திற்கு ஒரே ஒருவரைத்தான் குறை கூற முடியும். அவர் கெவின் ரூட்.
இவர்தான் இந்தோனேசிய அரசைத் தொடர்பு கொண்டு இந்தக் கப்பலை தடுத்து கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டவர். இவர்தான் இந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் கெடுத்தவர். ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது போன்ற அகதிகள் அந்தஸ்து இவர்களுக்கும் கிடைக்காமல் செய்தவர்.தனது பொறுப்பை செய்யாமல், ஒருவர் பின் ஒருவராக சாகச் செய்து வருகிறார் கெவின் ரூட். இந்த மக்கள் உடனடியாக ஆஸ்திரேலியா வருவதற்கு கெவின் ரூட் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த அப்பாவி மக்கள் உயிர் பிழைக்க முடியும் என்றார்.