Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“இந்து ராம்” செல்ல முடியுமென்றால்,ஏன் மக்கள் பிரதிநிதிகள் தமது மக்களைப்பார்வையிட முடியாது? : ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்.

 
 

உள்நாட்டு யுத்தம், இயற்கை அழிவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த காலங்களில் அந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப நாட்டு மக்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்ததை நாம் அறிந்ததே.

அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஒருபுறம் ஒரு அரசாங்கத்தின் உள்நாட்டு இறைமையை உறுதிப்படுத்துவதாக அமைந்தாலும் மறுபுறத்தில் அது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறப்படும் சம்பவமாகவும் நவீன அரசியல் ஆய்வாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகிறது.

குடிமக்கள் மீதான கட்டுப்பாடுகளை ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தற்போது மேற்கத்திய நாடுகளில் வலுவூன்றியுள்ளதால் அந்த மேற்கத்திய நாடுகள் கட்டுப்பாடுளை தளர்த்தி வரும் நிலையில்,

இலங்கை உட்பட பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தொடர்ந்தும் குடிமக்கள் மீதான அந்த கட்டுப்பாடுளை தளர்த்துவதில் பின்னிற்பதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து சில மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அந்த காலப்பகுதியிலும், அதற்கு முன்னரும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படாத நிலை நிலவுவதை நாம் அவதானிக்கலாம்.

குடிமக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கமென்ற வகையில் என்ன காரணத்திற்காக அந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்ற விளக்கத்தை குடிமக்களுக்கு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது.

எனினும் கட்டுப்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் குடிமக்களுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா என எழுப்பப்படும் கேள்விக்கு இல்லையென்றே பதில் கூறவேண்டியுள்ளது.

அத்துடன் குடிமக்கள் விவகாரம் ஒருபுறமிருக்க குடிமக்களுக்கு சேவை புரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசாங்கம் மீது சர்வதேசம் தமது நல்லபிப்பிராயத்தை இழக்கவே வழிவகுக்கும்.

குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் எழுந்துள்ள பிந்திய முறுகல் நிலையானது தற்போது முக்கிய விவகாரமாக கருதப்படுகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைவர் தமக்கும், அரசாங்கத்திற்கும் நிலவும் முறுகலை ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜக்கப் ஹெலன்பேகர் தமது அமைப்பு மீது இலங்கை அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாதென பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

அத்துடன் அவர் செஞ்சிலுவைச் சங்கம் எவ்வாறு, எங்கு பணியாற்றுவது என்பது குறித்து அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளையும் ஏற்க மறுத்துள்ளார்.

மேலும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணி தொடர்பில் அரசாங்கத்துடன் முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசாங்கத்துடன் கலந்துரையாடி விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் ரொய்ட்டருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்றமையால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் அங்கு அவசியமற்றதெனக் கூறி ஏற்கனவே அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் இடைநிறுத்தியிருந்தது.

அவ்வாறான ஒரு நிலையிலேயே அரசாங்கத் தரப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீது மேற்கொண்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் அதனை விசனம் கொள்ளச் செய்துள்ளமை தெளிவாகிறது.

உலகளாவிய ரீதியில் மனிதாபிமான விவகாரப் பணிகளை மேற்கொள்ளும் செஞ்சிலுவைச் சங்கம் தமது பணிகளை இவ்வாறுதான் அல்லது இங்குதான் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பாக வரையறுப்பது நடைமுறைக்கு பொருந்தாதுதான்.

இந்த நிலையில் நாட்டின் குடிமக்களுக்கு சேவை புரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீது ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும்.

மேலும் யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கம் கூறும் நிலையின் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் என நாட்டு மக்களோ அல்லது சர்வதேசமோ தொடுக்கும் சந்தேகங்களுக்கு விடையளிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கும் கூடைக்குள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் உள்ளடக்க முடியாது. சில அரச சார்பற்ற நிறுவனங்களை நாட்டிலிருந்து அரசாங்கம் வெளியேற்றிய போது அது குறித்து ஆர்வம் காட்டப்படவில்லை. ஏனெனில் அவற்றின் நோக்கம் மக்களுக்கு சேவை புரிவதைவிட மதமாற்றமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபட்டதே செஞ்சிலுவைச் சங்க விவகாரம். பல்வேறு நாடுகளினால் ஏற்கப்பட்ட ஜெனீவா சமவாயத்திற்கு ஏற்ப செயற்படும் அமைப்பான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் முறுகலை ஏற்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதிப்புகளையே ஏற்படுத்துவதுடன், சர்வதேச உதவிகள் கூட மக்களை சென்றடைய சிக்கலை உண்டாக்கலாம்.. ஊடகவியலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் யாழ்ப்பாணம், வவுனியா மாநகர மற்றும் நகர சபைகளுக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அது குறித்து செய்திகளை சேகரிக்க தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதுகுறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கூட தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இதனால் ஊடகவியலாளர்கள் முற்று முழுதாக அரசாங்கத்தின் தகவல் மூலகங்களையே நம்பியிருக்க வேண்டியேற் பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைபிடிக்கப்பட்ட செய்தித் தணிக்கை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் அவலங்கள் மற்றும் இழப்புகள் குறித்த அதிக விபரங்கள் வெளிவரவில்லை.

தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பது ஆரோக்கியமானதல்ல.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த பொறுப்பை விட தற்போதுதான் ஊடகவியலாளர்களுக்கு பாரிய பணி காத்திருக்கிறது.

ஏனெனில், யுத்தம் நடைபெறுகையில் முதலில் மடிவது உண்மையே அன்றி மனிதரல்ல. ஆனால் தற்போது யுத்தம் இல்லை. இந்நிலையில் தற்போது உண்மைகளை மரணிக்கச் செய்ய முடியாது.

எனவே எவ்வித நிபந்தனைகளுமின்றி ஊடகவியலாளர்கள் மீதும், அவர்களின் செயற்பாடுகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகள் குறித்து நேரில் சென்று தகவல்களை திரட்ட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளராத நிலையில் தேர்தல் குறித்து கூட மக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

இது வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போவதாக கூறும் அரசாங்கத்திற்கு உகந்ததல்ல. இதுவே மங்கள சமரவீர எம்.பி. யின் வாதமாகக் கூட உள்ளது. வடபகுதி மக்களுக்கு ஜனநாயக்தை வழங்கத் தேர்தலை நடத்துவதாக கூறும் அரசாங்கம், சுயாதீன ஊடகவியலாளர்களை அங்கு செல்ல அனுமதிக்காமல் இருப்பது ஏன் என்றும் மங்கள் சமரவீர எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போது யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் வடக்கில் மேலும் சில உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் அந்தத் தேர்தல் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காவது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மக்கள் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு , இயற்கை அழிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு அறியப்படுத்தும் இடைத்தரகராக ஊடகங்கள் செயற்பட இதுவே சரியான சந்தர்ப்பம்.

அரசாங்கத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின், பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவிசாய்க்க ஆயத்தமாக இருக்குமாயின் யுத்தம் நடைபெற்ற பகுதிகள் மற்றும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை ஊடகங்கள் கட்டுப்பாடுகள் இன்றி சுயாதீனமாக அணுக உடனடியாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு தெரியவரும். சர்வதேசம் மக்களின் பிரச்சினைகளை இனங்காணும்.

இதன்மூலம் சர்வதேசத்தின் உதவிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும். அந்நிய செலாவணியைக் கூட அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.

எனவே காலம் தாமதிக்காது ஊடகவியலாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதே அரசாங்கத்திற்குள்ள முதற்தர தெரிவாக அமையவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்டுப்பாடுகள்

அரசாங்கம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட இதுவரை அனுமதி வழங்காத நிலையில் அவர்கள் இவ்விடயத்தில் தமக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அரசாங்கப் பிரதிநிதிகளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் குடிமக்களினாலே தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த குடிமக்களை பார்வையிட அவர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்படாமை ஆச்சரியமானதே.

எதிர்க்கட்சிகள் பலமுறை அரசாங்கத்திடமும், பாதுகாப்பு அமைச்சிடமும் வேண்டுகோள் விடுத்தும் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தங்களை மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்ல அனுமதித்தால் உண்மைகள் உலகுக்கு தெரியவரும் என்பதால்தான் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தமது மக்களை பார்வையிட அனுமதி வழங்கும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டி இலங்கை மக்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவதை விட தாமாகவே முன்வந்து முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவதே சிறப்பானது.

இந்துப் பத்திரிகையின் ராமுக்கு தனி உலங்கு வானூர்தி வழங்கி அவர் வவுனியா சென்று அங்குள்ள மக்களை பார்வையிட முடியுமென்றால் ஏன் இலங்கையின் மக்கள் பிரதிநிதிகள் தமது மக்களைப்பார்வையிட முடியாது என்பதற்குஅரசாங்கம் என்ன கூறப்போகிறது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் தாராளமாகவே கட்டுப்பாடுகளை அனுபவித்துவிட்டனர். இனியும் காரணங்களைக் கூறி மேலும் கட்டுப்பாடுகளை விதிக்காமல்அரச சார்பற்ற நிறுவனங்கள் வினைத்திறனுடன் மக்களுக்கு சேவை புரியவும், மக்களின் சுதந்திர வாழ்வுக்கும், ஊடகங்களின் சுயாதீன செயற்பாட்டுக்கும் அரசாங்கம் திறந்த மற்றும் பரந்த மனதுடன் செயற்படுவதே சிறந்தது.

Thanks:Thinakkural.

 

Exit mobile version