இந்து ராமுக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பிலான ஒரு பிரதிபலிப்பு:காலகண்டன்
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான இந்து (The Hindu) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பேட்டி கண்டிருந்தார். அதன் முழு விபரமும் அண்மையில் இந்து பத்திரிகையில் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளிவந்தது. அதன் மூலம் இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் வாசகர்களுக்கு இலங்கை ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இலங்கைப் பத்திரிகைகளும் அப்பேட்டியை பிரசுரித்துள்ளதுடன் அது பற்றிய கருத்துகளையும் கூறியுள்ளன.
இந்தியாவின் இந்து பத்திரிகை நிறுவனம் நீண்டகாலப் பத்திரிகைப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும். பிராமணிய ஆதிக்கக் கருத்தியல் கொண்ட அந்நிறுவனத்தின் இந்து பத்திரிகை எப்பொழுதும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் மேட்டுக்குடி நலன்களையும் மையப்படுத்தியே வந்துள்ளதொன்றாகும். இவ் இந்து நிறுவனத்தின் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் இந்துப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நரசிம்மன் ராம். இவர் மற்றொரு இந்து நிறுவன ஆங்கில சஞ்சிகையான ஃபுரன்லைன் (Front line) க்கும் பிரதம ஆசிரியராக இருந்து வருபவர். இந்த இந்து என். ராம் இந்தியாவின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர் என்றும் அறியப்படுபவர். இவற்றுக்கு மேலாக இலங்கையின் ஆளும் தரப்புகளின் தலைவர்களோடு நெருக்கமான உறவுகளையும் கொண்டிருப்பவர். கடந்த 30 வருடகால இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை காரணமான யுத்த சூழலில் இந்து ராம் இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளிலும் கருத்துப் பரிமாறல்களிலும் ஈடுபட்டு வந்தவர். குறிப்பிட்டுக் கூறுவதானால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் இலங்கைத் தலைவர்களுக்கு அவ்வப்போது எடுத்துக் கூறுவதிலும் முன் நின்றவர். அவர், இடதுசாரி என்ற தோற்றம் கொண்டிருப்பினும் இந்திய மேலாதிக்க நிலைப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வற்புறுத்தத் தவறவில்லை என்பது அவரை அவதானித்தவர்களின் கருத்தாகும்.
அந்த வகையில் இந்து பத்திரிகையும் அதன் ஆசிரியர் ராமும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் மேம்போக்கையும் எதிர் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். இதனால் தமிழ் நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் என்போரின் ஆத்திரத்திற்கும் ஆட்பட்டவர். தமிழ் உணர்வாளர்கள் உணர்ச்சிவசப்படுவதும் ஆத்திரம் கொள்வதெல்லாம் நியாயமாகிவிட முடியாது. ஆனால், இந்துப் பத்திரிகையும் அதன் ஆசிரியர் ராமும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் யாவற்றையும் புலிகள் இயக்கம் என்ற கறுப்புக் கண்ணாடிக்கு ஊடாகவே பார்த்து வந்தார் என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். எவ்வாறாயினும் இலங்கையின் பத்திரிகைகளோடும் அவற்றுக்குள்ள கருத்துச் சுதந்திரங்களோடும் ஒப்பிடும் போது இந்திய நிலைமை வேறுபட்டவையாகும். கருத்துச் சுதந்திரமும் அவற்றைக் கூறும் துணிவும் வெளியிடும் பத்திரிகைகளின் தரமும் இங்கிருப்பதை விடப் பலமடங்கு அதிகம் என்று கூற முடியும். இது பற்றித் தனியே விவாதிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு பத்திரிகைப் பேட்டிகளின் போதும் அதனை வழங்குவோரின் உள்ளக்கிடக்கைகள் எவ்வாறாயினும் வெளிவந்து விடுவது இயல்பானதாகும். அந்தவகையில் நமது நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அவரது உள் உறைந்து காணப்படும் பல்வேறு விடயங்களை வெளிக்கொணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இரண்டு விடயங்களின் மத்தியில் ஜனாதிபதியின் பேட்டியானது இடம்பெற்றிருக்கிறது. ஒன்று முப்பது வருடகால யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு அதன் வெற்றிக் களிப்பை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பெற்றிருக்கும் தருணமாகும். இரண்டாவது இந்த வெற்றியின் முழக்கங்கள் ஓய்வதற்கு முன்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய சூழ்நிலையாகும். எனவே, அடுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் வகையிலும் அறுபது வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாவது தடவையாகப் பதவிக்கு வந்து கொள்வதற்காகவும் உரிய காய்நகர்த்தல்கள் செய்யப்படுவதை ஜனாதிபதியின் பேட்டியில் காணமுடிகின்றது.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெளிவுபடுத்திக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இந்தியா சற்று அழுத்திக் கூற முற்படும் பதின்மூன்றாவது திருத்தம் பற்றி பேட்டி கண்ட என்.ராம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை. ஜனாதிபதி அதற்கான பதிலை எச் சந்தர்ப்பத்திலும் விபரமாகக் கூறவும் இல்லை. ஆனால், அதற்கான பதிலை வேறு விதத்தில் ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். சமஷ்டி முறை என்பது கிடைக்கவே கிடையாது என்று கூறியதன் மூலம் தனது ஒற்றையாட்சி முறைமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் எதைக் கொடுப்பது, எதை கொடுக்கக்கூடாது என்பது தனக்குத் தெரியும் என்றும் எடுத்துரைத்திருக்கிறார். அத்துடன், அவர்கள் கேட்பதை என்னால் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மை இனம் இந்நாட்டில் இல்லை என்று மீண்டும் மீண்டும் ஜனாதிபதி எடுத்துக் கூறி வருகிறார். அதன் அர்த்தம் தான் புரியாத புதிராக இருந்து வருகிறது. அப்படிக் கூறுவதன் மூலம் இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் இல்லை என்று கூறுகிறாரா? அல்லது அவற்றுக்கு இன, மொழி, மத, பிரதேச பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று காட்ட முற்படுகிறாரா? அப்படியாயின் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதாகவும் அதற்கான அரசியல் தீர்வு தேவையற்றது என்றும் ஜனாதிபதி முடிவுக்கு வந்துவிட்டாரா? அல்லது இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் யாவும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் படிப்படியாகப் பெரும்பான்மைச் சிங்கள தேசிய இனத்துடன் ஒன்று கலக்கச் செய்யும் முயற்சிகளாக இருக்கப்போகின்றதா? போன்ற கேள்விகளையே எழுப்புகின்றன.
ஜனாதிபதியுடனான பேட்டி இடம்பெறுவதற்கு முன்பு இந்து ராம் வவுனியாவிற்குச் சென்று முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்வையிட்டுத் திரும்பினார். அங்கு வசதிகள் யாவும் மக்களுக்கு இருப்பதாகவும் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் காட்சிப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார். அதனைப் பார்த்து திருப்தியுடன் எழுதியும் இருப்பார். ஆனால், மூன்று இலட்சம் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களும் வேதனைகளும் ராமுக்கு காட்டப்பட்டிருக்க நியாயமில்லை. அப்படிப் பார்த்திருந்தாலும் அவர் அக்கறையுடன் அதை எழுதியிருக்க அவரின் பக்கத்தில் நியாயமும் இல்லை. இம் முகாம்களுக்கு வெளியில் இருந்து எவரும் அல்லது பத்திரிகையாளர்களோ ஊடகங்களோ அனுமதிக்கப்படாத நிலையில் இந்து ராம் மட்டும் சென்று வந்திருப்பது அரசுடன் அவர் கொண்டுள்ள நல்லுறவையே எடுத்துக் காட்டுகின்றது என்றே கொள்ளல் வேண்டும்.
மேலும் இப்பேட்டியின் போது நாட்டில் இனவாதம் இல்லை என்றும் எந்தவொரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை என்றும் எந்தவொரு தமிழரும் அச்சுறுத்தப்படவில்லையென்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்விடயத்தில் தான் மிகக் கவனமாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது பெருமளவுக்கு உண்மை தான். குறிப்பிடத்தக்க சம்பவம் இனவெறி அடிப்படையில் இடம்பெற்றிருக்கவில்லை. ஓரிரு தனிப்பட்ட சம்பவங்கள் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தும் வகையில் இடம்பெற்றிருப்பினும் அவை தொடரவோ விரிவடையவோ இல்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் அவர்கள் சார்ந்த இணையத்தளங்களும் இட்டுக்கட்டியவாறான இனவாதச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
ஆனால், இனவாதம் நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி கூறுவது ஏற்புடைய ஒன்றல்ல. அவரது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளுடன் இருந்து வரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் நாளாந்தம் பரப்பி வரும்பேரினவாதப் பேச்சுக்களையும் எடுக்கும் சபதங்களையும் ஜனாதிபதி இனவாதமாகக் கொள்ளவில்லையா? தேசிய பிக்குமார் முன்னணியும் அதன் தலைவர் அமில தேரரும் கூறி வருபவை இன விரிசல்களை மேன்மேலும் அகலமாக்கும் நடவடிக்கைகள் இல்லையா?
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தெற்கில் விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைகள் தான் இன்று வரையான பேரினவாதப்பெரு விருட்சமாகிக் கொண்ட இலங்கை வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்ற உண்மை உணரப்படல் வேண்டும். அதேவேளை, வடக்கில் பழைமை வாத தமிழ்த் தேசியவாதமானது அண்மைக்காலத்தில் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழீழக் கோரிக்கை வரையான குறுந்தேசியவாதப் பாதையில் பயணித்து வந்த உண்மைகளைக் காணத் தவறக் கூடாது. இவ்விரு போக்குகளில் ஒன்றை ஏற்று மற்றதை மட்டும் நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரு புறத்திலும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பௌத்த சிங்களப் பேரினவாதமும் பழைமைப் பற்றுடனான தமிழ்க் குறுந் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று ஊட்டமளித்தே வந்திருக்கின்றன. இவற்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் எவ்வித பலாபலன்களையும் பெறவில்லை. பதிலுக்கு இனங்களிடையேயான இன விரிசல்களும் இன மோதல்களும் பரஸ்பர நிராகரிப்புகளுமே இடம்பெற்று வந்துள்ளன. இதில் தமிழ் மக்களே மிகப் பெரும் இழப்புகளையும் துயரங்களையும் அனுபவித்து வந்துள்ளனர். இன்று இவற்றின் உச்ச கட்டத்தையே காண முடிகின்றது.
இன்றும் கூட குறுந்தேசியவாத வழி நின்று தமிழ் மக்களைத் தவறான பாதையில் பயணிக்க வைத்து அழைத்துச் சென்றவர்களுக்கும் அவற்றை நம்பிச் சென்று அவலங்களைத் தேடி நிற்கும் சாதாரண தமிழ் மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் அடையாளம் காண மறுப்பது தான் பிரச்சினையின் மையப் புள்ளியாகக் காணப்படுகிறது. இதனை விளங்கிக் கொண்டமையையோ அல்லது அதற்கு தீர்வு காண்பதையையோ ஜனாதிபதி தனது பேட்டியின் போது ஒரு இடத்தில் தானும் வெளிப்படுத்தவில்லை. இன்று யாவற்றையும் விட முதன்மை பெற்று நிற்கும் விடயம் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் மூன்று இலட்சம் மக்கள் விடுவிக்கப்படவேண்டிய விடயமாகும். அம் மக்கள் சொந்த இடங்களுக்கு மீளச் சென்று இயல்பு வாழ்வு வாழ வழிகள் வகுக்கப்படல் வேண்டும். அவற்றை தள்ளிப்போடும் நடைமுறைகள் மூலம் அம்மக்கள் தொடர்ந்து தண்டிக்கப்படக்கூடாது. வெறுமனே பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி அரசியல் யதார்த்தங்களையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் புறந்தள்ள முடியாது. “இத்தகைய அவலவாழ்வு தொடர்வதை விடச் செத்துத்தொலைந்து போவது மேலானது’ என்ற மன நிலைக்கு சொந்த நாட்டு மக்களை யோசிக்க வைப்பது ஒரு சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு உரிய நிலைப்பாடாக இருக்க முடியாது.
எனவே, வரலாற்றில் பெரும் வெற்றியை வென்றெடுத்துள்ளதாகப் பெருமைப்படும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தூர நோக்கில் அவர் கூறும் சமாதானம் சுபீட்சம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப முன்வரல்வேண்டும். அதற்குரிய துணிவானதும் உறுதியானதுமான தீர்மானங்களுக்கு உடனடியாக முன்வரல்வேண்டும். அதில் ஒன்று தடுத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுவித்து புனர் வாழ்வுக்கு வழி வகுப்பது இரண்டாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வுகாண்பது .
அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தென்னிலங்கைத் தலைமை வழமையாகப் பாடிவரும் பல்லவி தான் இப்போதும் பாடப்படுகிறது. அதாவது, பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்றும் சிங்கள மக்கள் வழங்கும் ஆணை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய நிலைப்பாட்டினால் தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கிறது. பசித்தவர்களுத்தான் உணவு அவசியமே தவிர ஏற்கனவே பசியாறி இருப்போரிடம் அனுமதி பெற்று உணவு பரிமாற வேண்டிய அவசியம் இருக்கமுடியாது.அது எவ்வகையிலும் நியாயமும் ஆகாது.
Thank:Tinakkural.
|