Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய விவசாயிகளுக்கு பில் கேட்ஸ் 44 கோடி ரூபா நிதியுதவி!

மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் – மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு 44.72 கோடி ரூபா நிதியுதவி வழங்குகிறது.

உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் விவசாயத்தை செழிக்கச் செய்யும் வகையில், 120 மில்லியன் டொலர் செலவிலான பிரமாண்டத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது கேட்ஸ் பவுண்டேஷன். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியைச் செய்கிறது.

இதுகுறித்து டெஸ்மாய்ன்ஸ் நகரில் கேட்ஸ் கூறுகையில்,

“மெலின்டாவும், நானும், ஏழை விவசாயிகளுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களது விவசாயம் தழைத்தோங்க எங்களால் முடிந்த சிறு உதவி இது. பசி, பட்டினி, ஏழ்மையை விரட்டும் வகையில் விவசாயிகள் பெருமளவில் விவசாயப் பணிகளில் ஈடுபட இது உதவியாக இருக்கும்.

இந்தியா போன்ற நாடுகளில் 1960களிலிருந்து 80கள் வரை பெரும் விவசாயப் புரட்சி நடந்தது. இதை உலக நாடுகள் பாடமாக எடுத்துக் கொண்டு விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர முயல வேண்டும். இந்தியாவில் தோன்றிய பசுமைப் புரட்சி மிகவும் மகத்தானது.

இப்படிப்பட்ட விவசாயஎழுச்சியின் மூலமாக பஞ்சத்தைப் போக்கலாம்; கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கலாம்; வறுமையை விரட்டலாம்; பொருளாதார முன்னேற்றத்தையும், வளத்தையும் பெறலாம்.

அதேசமயம், முதலில் தோன்றிய பசுமைப் புரட்சியின்போது நடந்த அதீத உரப் பயன்பாடு, நீர்ப்பாசனம் போன்றவற்றில் ஏற்பட்ட தவறுகளை விஞ்ஞானிகளும், அரசுகளும், விவசாயிகளும் மீண்டும் செய்து விடாமல் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை விவசாயப் பணியில் திருப்பி அவர்களை முழுமையான, வளர்ச்சி பெற்ற விவசாயிகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.இதனால் அவர்களின் வருவாயும் அதிகரிக்கும்” என்றார்.

Exit mobile version