18.03.2009.
மட்டக்களப்பு நகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வியாபாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் தமது எதிரப்பை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதிகளிலும் தனியார் வீடுகளிலும் 100 ற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் தங்கியிருந்து வீடு வீடாகச் சென்றும் அலுவலகங்களுக்கு சென்றும் கடந்த 3- 4 வருடங்களாக இவ் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வரிகளைச் செலுத்துவது ,ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவது உட்பட நிதி நெருக்கடிகளையும் தாம் எதிர் நோக்குவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்
ஏற்கனவே ஒரு சில இந்திய வியாபாரிகளே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டமையினால் அது தங்களை பெரிதாக பாதிக்கவில்லை என்றும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் படையெடுத்து வந்து இப்படியான வியாபாரத்தில் ஈடுபடுவதால் தான் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்
உல்லாச பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழையும் இவர்கள் இப்படியான வியாபாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக மாகாண முதலமைச்சர் ,மாநகர முதலவர் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்திற்க கொண்டு வருவதற்காக நூற்றிற்கு மேற்ப்பட்ட புடவை வர்த்தகர்கள் கூட்டாக வர்ததக சங்கத்திடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.