Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மக்கள் மீது இடியாய் இறங்குகிறது விலைவாசி உயர்வு.

சாரசியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வு இந்தியாவில் சகஜமான ஒன்றாகி விட்டது. இப்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வுகள் இந்திய மக்கள் மீது இடியாய் இறங்கக் காத்திருக்கிறது. தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.73-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2-ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 35-ம் உயர்த்தப்பட்டுள்ளது. கெரசின் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவே அமலுக்கு வந்தது. இனி சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டிலும் பெட்ரோல், விலை உயரும். குறைந்தால் அதற்கேற்ப குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும் என்று பெட்ரோலியத்துறைச் செயலர் எஸ். சுந்தரேசன் தெரிவித்தார். தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 77 டாலராக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் இதற்கு அரசு அளித்து வந்த மானியம் பெருமளவு குறையும். சர்வதேச சந்தை விலையை விட குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசலை விற்றதால் ஏற்பட்டு வந்த நஷ்டமும் பெட்ரோலிய நிறுவனங்களுக்குக் குறையும். இருப்பினும் கெரசின் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியத்தை தொடர்வதென அரசு முடிவு செய்துள்ளதாக சுந்தரேசன் மேலும் கூறினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் மீதான கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கை ஒரு முறை சந்தித்துப் பேசியபோது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாவிடில் பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முரளி தேவ்ரா குறிப்பிட்டதாகவும், இதே கருத்தை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவித்ததாக சுந்தரேசன் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் இரட்டை இலக்கத்தை (10.16) தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசலை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 215 கோடி நஷ்டத்தைச் சந்தித்தன. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டாலும், டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ. 1.80-ம், கெரசின் லிட்டருக்கு ரூ. 15.02-ம், சமையல் எரிவாயு விற்பனையால் சிலிண்டருக்கு ரூ. 226ம் நஷ்டம் ஏற்படும். இதை மத்திய அரசு மானியமாக அளிக்கும். தற்போதைய விலை உயர்வால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் ஆண்டு நஷ்டம் ரூ. 53 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 21 ஆயிரம் கோடியாக குறையும். தற்போது மே மாதத்துடன் முடிவடைந்த மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 10.16 சதவீதமாக இருந்தது. இது 0.9 சதவீதம் அதிகரிக்கும் என பொருளாதார ஆலோசகர் கெüஷிக் பாசு தெரிவித்துள்ளார். அரசின் மானிய சுமை குறைவதால் பணவீக்கம் நடப்பு நிதி ஆண்டில் பெருமளவு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார். பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். அதாவது சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப இது நிர்ணயிக்கப்படும். பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் விஷயத்தில் இனி மத்திய அரசு தலையிடாது என்றும் தெரிகிறது. முழுக்க பெட்ரோல் இறக்குமதியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிற முடிவை அரசு எடுத்து மக்களை அழிவின் விழிம்பிற்கு அனுப்பியுள்ளது.

Exit mobile version