இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசமான வாகரைக்கு இவர்கள் விஜயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் இந்திய உதவியுடன் தற்போது பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ள ரயில் பஸ் சேவையை பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபை மாலையில் இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடனான சந்திப்பொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திற்கான இவர்களது விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றிரவே தனக்கு அறிவிக்கப்பட்டதாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று முழுநாளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இவர்கள் மேற்கொள்ளவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, குறிப்பிட்ட நாடாளுமன்ற குழுவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
தற்போது கொழும்பில் தங்கியுள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.