Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய நாடாளுமன்றக் குழுவின் யாழ்ப்பாண விஜயம்:மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை!

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய இந்த இந்திய நாடாளுமன்றக் குழுவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைத்து வந்திருந்தார். அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உட்பட்டோர் வரவேற்றனர்.

பின்னர் தந்தை செல்வாவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவர்கள், யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கூடியிருந்தோருக்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் உட்பட்டோர், வடக்கில் அபிவிருத்திகளை காட்டிலும் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதே உண்மையான அபிவிருத்தியாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அங்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர், மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவே கருத்துக்களை முன்வைத்தனர்.

மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் தெரிவித்த போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கி வந்த டி ஆர் பாலு வேறு எந்தப் பிரச்சினைகளும் இருக்கின்றனவா? என்ற கேள்வியை கேட்டு தமக்கான கேள்வியில் இருந்து நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வரின மகள் கனிமொழி, இதன் போது கருத்துக்களை முன்வைப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்தபோதும் அவர், இங்குள்ள பிரச்சினைகளை தாம் தமிழக அரசாங்கத்தின் கவனத்திற்கும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக குறிப்பிட்ட அளவில் தமது கருத்துக்களை நிறுத்திக்கொண்டார்.

இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமும், யாழ்ப்பாண மீனவர் சங்கமும் பல கேள்விகளை தொடுத்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இந்திய நாடாளுமன்றக்குழுவிடம் கேட்ட கேள்வி அவர்களை சற்று தடுமாற வைத்தது, ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது வன்னியில் சிக்குண்டிருந்த மாணவர்கள்,உட்பட்ட பொதுமக்கள் ஒரு திருப்திகரமான முடிவு ஏற்படாதா என ஏங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்த அவர், அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பல மாணவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

எனினும் இந்த கேள்விக்கும் கருத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து எவ்வித திருப்திகரமான பதிலும் வழங்கப்படவில்லை.

இதேவேளை இந்தியக் குழுவில் வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், எந்த ஒரு காத்திரமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்தக் குழுவினர் இன்கு பகல் 12 மணியளவில் வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மக்களுடன் கலந்துரையாடிய அவர்கள், தாம் கொண்டு வந்திருந்த நூல்களையும் விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முகாம்களுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியவில்லை. 

இதேவேளை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, தாம் இலங்கையில் கண்ட விடயங்களை கொண்டு தாம் அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version