Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு :சீனா மீது குற்றச்சாட்டு

31.03.2009.

இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் உலகின் பல நாடுகளிலுள்ளன. இந்நிலையில் இந்த அலுவலக கணினிகளில் தகவல்கள் திருடப்படுவதாகவும் உளவு பார்க்கப்படுவதாகவும் தலாய்லாமா அமைப்பினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, இதுபற்றி விசாரணை நடத்துமாறு கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் இத்தகைய சைபர் குற்றங்களைத் துப்பு துலக்குவதில் முன்அனுபவம் பெற்றவர்கள். அதன் அடிப்படையில் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சீனாவிலிருந்து செயற்படும் ஒரு கணினி உளவுக் கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 103 நாடுகளில் 1,295 கணினிகளில் இந்தக் கும்பல் ஊடுருவியுள்ளது. இதற்காக பிரத்தியேகமான மென்பொருளை இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. கணினிகளில் திருட்டுத்தனமாகப் புகுந்து ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதுடன் அந்தக் கணினிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

தலாய்லாமாவை மட்டுமன்றி தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களை குறிவைத்து இக்கும்பல் இயங்கியுள்ளது. தற்போதும் வாரத்துக்கு 10இற்கும் அதிகமான புதிய கணினிகளில் இக்கும்பல் ஊடுருவி வருவதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்தக் கும்பல் வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. பன்னாட்டு (நேட்டோ) படைகளின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசின் அலுவலக கணினிகளில் புகுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பல்வேறு நாட்டு தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள், அரச அலுவலகங்கள், இந்தியா, பிரசெல்ஸ், லண்டன், நியூயோர்க் ஆகிய இடங்களிலுள்ள தலாய்லாமா அலுவலக கணினிகள் ஆகியவற்றில் சீன கணினி உளவுக் கும்பல் ஊடுருவியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தக் கும்பலின் தகவல் திருட்டுக்கு சில ஆதாரங்களும் சிக்கியுள்ளன. உதாரணமாக ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரியை நேரில் வருமாறு தலாய்லாமா அலுவலகம் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தது. அதை மோப்பம் பிடித்த சீன அரசு இந்த அதிகாரியை தொடர்பு கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்து விட்டது.

இருப்பினும் இந்த சைபர் குற்றத்தில் சீன அரசுக்கு தொடர்பு இல்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நியூயோர்க் நகரிலுள்ள சீன தூதரகச் செய்தித் தொடர்பாளரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version