மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்பட 195 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசிய பராக் ஒபாமா, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவோடு தனது அரசு இணைந்து நிற்கும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக நேற்று வாஷிங்டனில் இருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அப்பாவி மக்களைக் குறிவைத்துக் கொல்லும் பயங்கரவாதிகளால் இந்தியாவின் ஜனநாயகத்தையோ, அவர்களை முறியடிப்பதற்காக ஒன்றுபட்டு நிற்கும் சர்வதேசத்தையோ முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து நிற்க வேண்டும். பயங்கரவாதிகளின் தொடர்புகளை அழிப்பதிலும், அவர்களின் வெறுக்கத்தக்க கொள்கைகளை தோல்வியுறச் செய்வதிலும் எல்லா நாடுகளும் மக்களும் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நேரத்தில் ஒரு அதிபர்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த சோகமான நேரத்தில் இந்தியாவிற்கு உதவுவதிலும், அமெரிக்கக் குடிமக்களைக் காப்பதிலும் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஆதரவைத் தருவோம் என்று கூறியுள்ளார்.
மும்பை நிலவரத்தை நான் முழுமையாகக் கவனித்து வருகிறேன், எனது அதிகாரிகள் உடனுக்குடன் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். இந்தியத் தூதர் ரோனன் சென்னுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.